டோக்கியோ திரைப்பட விழாவில் தமிழுக்குப் பெருமை சேர்த்த காகித மலர் !.
தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியனின் காகித மலர் திரைப்படம், சர்வதேச அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் *Asian Future* பிரிவில் உலகத் திரையிடலுக்குத் தேர்வான இப்படம், ஜப்பானிய ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
டோக்கியோ திரைப்பட விழாவில் காகித மலர் திரைப்படம் இரண்டு காட்சிகளாகத் திரையிடப்பட்டது. இரண்டு காட்சிகளுக்கும் அரங்கம் முழுவதும் பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர். ஜப்பானிய ரசிகர்கள் படத்தை ஆர்வத்துடன் பார்த்து ரசித்ததுடன், படம் முடிந்ததும் பலத்த கைதட்டல்களுடன் தங்களது பாராட்டுகளை வெளிப்படுத்தினர். இந்தச் சிறப்புத் திரையிடலில் படத்தின் தயாரிப்பாளர் பிரேமா செழியன் மற்றும் சிங்கப்பூரில் கல்வி பயின்று வரும் அவரது மகள் அதிதா செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திரையிடலுக்குப் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் பார்வையாளர்கள் திரைப்படம் தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்குப் பிரேமா செழியன் தமிழிலும், அதிதா செழியன் ஆங்கிலத்திலும் பதிலளித்தனர். அவர்களது பதில்கள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டன. காகித மலர் திரைப்படத்தைத் தேர்வு செய்தது குறித்து டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக் குழு உறுப்பினர் கென்ஜி இஷிசாகா பாராட்டிப் பேசியுள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் குறைந்த செலவிலும் உலகத் தரமான திரைப்படங்களை உருவாக்க முடியும் என்பதற்கு காகித மலர் சிறந்த எடுத்துக்காட்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய சினிமா என்றாலே பலருக்கும் பாலிவுட் படங்கள்தான் நினைவுக்கு வரும் நிலையில், இந்தியாவின் பிற மொழிகளிலும் தனித்துவமான படைப்புகள் உருவாகின்றன என்பதை உலக ரசிகர்களுக்குக் காட்டுவதற்காகவே இப்படத்தைத் தேர்வு செய்ததாகத் தெரிவித்துள்ளார். படம் தாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே பார்வையாளர்களைக் கவர்ந்ததுடன், அவர்களிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

திரைப்பட விமர்சகர் கேட்டி ரைஃப் (Katie Rife), டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களில் காகித மலர் தனித்துவமாகத் தெரிந்ததாகப் பாராட்டியுள்ளார். இனிமையான கதையமைப்பும் இலக்கிய நயமும் கொண்ட இந்தத் தமிழ்த் திரைப்படம், மற்ற படங்களிலிருந்து மாறுபட்டு தங்களது கவனத்தை ஈர்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஜப்பான் மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர்களும் ‘காகித மலர்’ திரைப்படத்தைத் தங்கள் நாடுகளில் வெளியிட ஆர்வம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் தயாரிப்பாளர் பிரேமா செழியன் நன்றி தெரிவித்துள்ளார் குறிப்பாக, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், ஒலி அமைப்பாளர் தபஸ் நாயக், செழியனின் உதவியாளர்களான பிச்சுமணி, ஆர்.பி. ராஜா, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், பேச்சியப்பன், நடிகர் பராந்தக சோழன், நடிகை ஜனனி செண்பகா உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரெழுத்து பதிப்பகம் சுதிர், அன்னம் பதிப்பகம் கதிர் மற்றும் பபாசி அமைப்புக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இந்தச் சர்வதேச அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் தங்களது அன்பிற்குரிய செழியனின் திருப்பாதங்களில் சமர்ப்பிப்பதாக பிரேமா செழியன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
டோக்கியோவில் கிடைத்த இந்த வரவேற்பைத் தொடர்ந்து, காகித மலர் திரைப்படம் மேலும் பல உலக நாடுகளில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்புகள் மொழி எல்லைகளைக் கடந்து சர்வதேச ரசிகர்களைச் சென்றடைவதற்கு இப்படம் மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
