நீங்க தேவைன்னா எங்க இருந்தாலும் தேடி வாய்ப்பு வரும்கா.. நடிகை தீபா குறித்து காதல் சுகுமார் நெகிழ்ச்சி பதிவு!

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பாலும், வெகுளித்தனமான பேச்சாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை தீபா
 
Kadhal sugumar

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பாலும், வெகுளித்தனமான பேச்சாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை தீபா. திரைப்படங்களில் மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமான இவர், பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

குறிப்பாக, கிராமத்துப் பெண் கதாபாத்திரங்களிலும், நகைச்சுவை கலந்த வேடங்களிலும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரது வெள்ளந்தியான பேச்சும், எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வரும் தீபா, சின்னத்திரையிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். கடைக்குட்டி சிங்கம், டாக்டர் , தலைவன் தலைவி உள்ளிட்ட பல படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில், நடிகை தீபாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகரும் இயக்குநருமான காதல் சுகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தீபாவுடன் பணியாற்றிய அனுபவத்தையும், அவரது நல்ல மனதையும் பாராட்டி எழுதியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்

யாருக்கெல்லாம் தீபா அக்கா நடிப்பைப் பிடிக்கும் ?அதில்  எந்தப் படம்?

சினிமாவில் வெகுளியாக நடிப்பவர்கள் பலபேர்.ஆனால் உண்மையாகவே திரையிலும் தரையிலும் ஒரே மாதிரி சிலர் இருக்கிறார்கள். அதில் எனக்குப் பிடித்தமான நடிகை தீபா அக்கா.\
நான் முதல் படம் "திருட்டு விசிடி" இயக்கும்போது TV ஷோ, சீரியல் என்று படுபிசியாக இருந்தார். 
நான் என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தேன். 
டிவி சீரியல் நடிகர்களை சினிமாவில் நடிக்க வைப்பதில் ஒரு சிரமம் இருக்கிறது. பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் மாதத்தில் 20 நாட்கள் சீரியலுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டால் அவர்கள் அந்த தேதியில் ஷூட்டிங் இல்லாவிட்டாலும் வேறு படப்பிடிப்புக்கு போக முடியாது. 
காரணம் அன்றைய தேதியில் என்ன TRP ரேடிங் வருமோ அதற்கு தகுந்தாற்போல கதையை மாற்றுவார்கள். 
ஆனாலும் நான் காத்திருந்து படப்பிடிப்பு நடத்தினேன். அவ்வளவு சிறப்பாக வெள்ளந்தியான கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார். 
சமீபத்தில் ஒரு படத்திற்காக தேதி கேட்கும்போது... 
"எய்யா"மொதராத்திரி" டைரக்டர் உங்களுக்கு தெரியுமா?" 
"இல்லைக்கா.. என்ன விசயம்?" 
"இல்லைய்யா மொதராத்திரி 
படத்துக்கு 10 நாள் தேதி கேட்டிருந்தாரு.. அப்போ என்னால் தேதி குடுக்க முடியல... இப்போ அடுத்தப்படத்துக்கு சொல்லுங்க அப்டின்னு கால் பண்ணா எடுக்க மாட்டேங்கிறாரு அதான் " என்று  சொன்னார். அந்த அளவுக்கு யார் மனதும் புண்படாமல் பார்த்துக்கொள்வார்.
"க்கா.. நீங்க தேவைன்னா எங்க இருந்தாலும் தேடி வாய்ப்பு வரும்கா..
"நீ கால் பண்ணினா சொல்லு தம்பி ... அக்கா வேணும்னு பண்ணல.." என்றார் திரும்ப...
யக்கோவ் பெரிய பெரிய விருது மேடைகள் உங்களுக்காக காத்திருக்கிறது.👍💪
அனைவரின் மனம் கவர்ந்த அந்த வெள்ளந்தி மனசுக்காரிக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துகள் 🙏🎂🎉💪👍

இவ்வாறு காதல் சுகுமார் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

From Around the web