சர்வதேச திரைப்பட விழாவில் முத்திரை பதித்த 'காளிதாஸ் 2'... தமிழ்ச் சினிமாவுக்கு கிடைத்த பெருமை!

 
kalidas

தமிழ் சினிமாவின் தரமான கிரைம்-திரில்லர் படைப்புகளில் ஒன்றாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற 'காளிதாஸ்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளியான 'காளிதாஸ் 2', தற்போது சர்வதேச அளவில் புதிய அங்கீகாரத்தைப் பெற்று தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (SIFF 2026)-வில் திரையிடுவதற்காக இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஏழு திரைப்படங்களில் 'காளிதாஸ் 2' இடம்பிடித்துள்ளது. அதிலும், தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் இருந்து தேர்வான ஒரே படமாக 'காளிதாஸ் 2' அமைந்திருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.

சீனாவின் ஷாங்காய் நகரில் ஜூன் 12 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவின் சிறப்புத் திரையிடல்கள் ஜூன் 28 வரை பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் பங்கேற்ற இந்த விழாவில், 'காளிதாஸ் 2' திரையிடப்பட்டதன் மூலம் உலக ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இப்படத்தை இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் அவர் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பரத் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அஜய் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணிதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்ற 'காளிதாஸ் 2', தற்போது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருப்பது,படக்குழுவினருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்படத் துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது.

Tags

From Around the web