ரஜினி கைவிட்டாலும் நாம் கை கொடுப்போம்! சிபி சக்ரவர்த்திக்கு வாய்ப்பளிக்கும் கமல்ஹாசன்
தமிழ் திரையுலகில் இரு துருவங்களாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து பணியாற்ற உள்ள செய்தி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 'தலைவர் 173' எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தின் இயக்குனர் யார் என்பதில் தொடர்ந்து பல குழப்பங்களும், பரபரப்பு செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தொடக்கத்தில், இப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர். சி இயக்கப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுந்தர். சி இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து திடீரென விலகினார். அவர் விலகியதற்கான உண்மையான காரணம் இன்று வரை திரைமறைவு ரகசியமாகவே உள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து 'டான்' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சிபி சக்ரவர்த்தி 'தலைவர் 173' படத்தை இயக்குவார் எனத் தகவல்கள் வெளியாகின. சிபியும் இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது சிபி சக்ரவர்த்தியும் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகக் கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அவருக்குப் பதிலாக, 'ஓ மை கடவுளே' மற்றும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படங்களை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து ரஜினியின் படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே வேளையில், சிபி சக்ரவர்த்தி படத்திலிருந்து விலகவில்லை என்றும், ரஜினிகாந்த் கதையில் சில மாற்றங்களைச் செய்யச் சொல்லியிருப்பதாகவும், அதற்கான வேலைகளில் தான் சிபி தற்போது ஈடுபட்டுள்ளார் என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஒருவேளை, ரஜினிகாந்த் அஸ்வந்த் மாரிமுத்துவின் கதையை அதிகம் விரும்பி, அவரையே இயக்குனராகத் தேர்வு செய்யும் பட்சத்தில், பல மாதங்களாக இப்படத்திற்காக உழைத்த சிபி சக்ரவர்த்தியை அப்படியே கைவிட்டுவிடக் கூடாது எனத் தயாரிப்பாளர் கமல்ஹாசன் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி இந்த படத்திற்கு அஸ்வந்தை தேர்வு செய்தாலும், நாம் சிபியை வெளியேற்ற வேண்டாம். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பாக நமது நிறுவனத்திலேயே சிபிக்கு வேறு ஒரு படத்தைக் கொடுக்கலாம் என்று கமல்ஹாசன் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் 'தலைவர் 173' படத்தின் அதிகாரபூர்வ இயக்குனர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
