Kanguva Vs Kantara: கங்குவா தோல்வி.. காந்தாரா வெற்றி.. என்ன காரணம்?... ஒரு அலசல்!....

Movies: ஒரு திரைப்படம் எந்த புள்ளியில் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிக்கும் என்பதை கணிக்கவே முடியாது பெரிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பெரிய இயக்குனர், பெரிய இசையமைப்பாளர் என ஒரு பெரும் கூட்டணியில் ஒரு படம் வெளியாகி தோல்வியை பெறும். ஆனால் அறிமுக இயக்குனர், நடிகர் மற்றும் பில்டப் இல்லாமல் புரமோஷன் இல்லாமல் வெளிவந்து ஒரு படம் ஹிட் அடிக்கும்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து அதிகளவில் புரமோஷன், பில்டப் செய்யப்பட்டு வெளியான கங்குவா படம் ஓடவில்லை. அதேநேரம் கன்னட மொழியில் அந்த நேட்டிவிட்டிக்கு ஏற்ற படமாக வெளிவந்த கங்குவா முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டுமே தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. தவறு எங்கே நடக்கிறது? கங்குவா ஏன் தோல்வி? காந்தாரா ஏன் வெற்றி? என்பது பற்றி பார்ப்போம்.
படத்திற்கான புரமோஷன்: பெரிய பட்ஜெட், சூர்யா, பாபி தியோல், திஷா பத்தானி போன்ற ஃபேன் இந்தியா நடிகர் நடிகைகள் ஆகியவற்றோடு பிரமாண்டமான புரமோஷன் இருந்தும் கங்குவா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் காந்தாரா படம் பெரிய புரமோஷன் இல்லாமல்தான் வெளியானது. மிகவும் குறைவான பட்ஜெட். ஆனால் பாரம்பரியம், கடவுள் நம்பிக்கை போன்ற சாதாரண உணர்வுகளை இப்படம் பிரதிபலித்து ரசிகர்களுக்கு பிடித்த படமாக மாறியது.
கதை, காட்சி அமைப்பு: சின்ன படமோ, பெரிய படமோ, சின்ன நடிகரோ, பெரிய நடிகரோ, அந்த படத்தின் கதை ரசிகனின் மனதோடு கனெக்ட் ஆக வேண்டும். காட்சிகளிலும், திரைக்கதையிலும் ரசிகனை ஒன்ற வைக்க வேண்டும். பார்க்கிங், லப்பர் பந்து, டூரிஸ்ட் பேமிலி ஆகிய படங்கள் கதை, திரைக்கதையால்தான் வெற்றி பெற்றன. காந்தாரா படத்தின் கதை, அதில் காட்டப்பட்டிருந்த பஞ்சுருளி தெய்வம் தொடர்பான காட்சிகள் நமது கலாச்சாரத்தோடு ஆழமாக பிணைந்திருந்தது. கங்குவா தோற்றதுக்கும், காந்தாரா வெற்றி பெற்றதற்கும் இது முக்கிய காரணம்.
தொழில்நுட்பம் உதவுமா?: கங்குவா படத்தில் சூர்யா கடுமையான உழைப்பை போட்டிருந்தார். VFX காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. அதேநேரம் அந்த படத்தின் சவுண்ட் மற்றும் எடிட்டிங் ஆகியவை சரியில்லை என்கிற விமர்சனம் வந்தது. இதுவே அந்த படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. படம் முழுக்க கத்திக் கொண்டே இருக்கிறார்கள் என படம் பார்த்த ரசிகர்கள் பலரும் சொன்னார்கள். ஆனால் காந்தாரா படத்தின் தொழில்நுட்பம் சாதாரணமாக இருந்தாலும் காட்சி வடிவமைப்பு, இயக்கம், இசை என எல்லாம் உயிர்ப்புடன் இருந்தது. இதிலும் பஞ்சுருளி தெய்வம் கத்துவது போல காட்சிகள் வந்தாலும் அது அளவாக, தேவைப்படும் காட்சிகளில் மட்டும் இருந்தது.
ஓவர் பில்டப்: கங்குவா 2 ஆயிரம் கோடி வசூலை அடிக்கும் என அப்படத்தின் தயாரிப்பாளர் பேட்டி கொடுத்தார். ஆனால் முதல் வாரத்திலேயே படம் சுருண்டதால் தயாரிப்பாளர் ட்ரோலில் சிக்கினர். ஒரு படத்திற்கான புரமோஷனில் ஓவராக பேசக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் காந்தாரா படத்தில் எந்த பில்டப்பும் செய்யவில்லை. ‘படம் அப்படி.. இப்படி.. 1000 கோடி வசூலை அடிக்கும்’ என ரிஷப் ஷெட்டி எங்கும் பேசவில்லை. மிகவும் இயல்பாக பேசினார். படம் சிறப்பாக இருக்கிறது என்கிற வாய்மொழி விமர்சனம் மற்றும் சமூக வலைதளங்களில் கிடைத்த பாராட்டுகளாலேயே காந்தாரா மற்றும் காந்தாரா 2 ஆகிய இரண்டு படங்களும் மெகா வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதை தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உணர்வுப்பூர்வமான கதை: ஒரு படத்தில் பெரிய நடிகர், பெரிய இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள், அசத்தலான காட்சி அமைப்புகள் என எல்லாம் இருந்தாலும் ரசிகர்களோடு ஒன்றிப் போகும் கதை மற்றும் உணர்வு பூர்வமான காட்சிகள் என்கிற ஆன்மா இல்லை என்றால் படம் தோற்றுவிடும். கங்குவா படம் இதற்கு பெரிய உதாரணம். ஆனால் சின்ன நடிகர், அவரே இயக்குனர், உணர்வுப்பூர்வமான காட்சிகள் காந்தரா 2 பாகங்களையும் வெற்றி பெற வைத்திருக்கிறது.
அதனால்தான் 2000 கோடி வசூலை அடிக்கும் என பில்டப் செய்யப்பட்ட கங்குவா நூறு கோடி வசூல் செய்தது. ஆனால் எந்த பில்டப்பும் இல்லாமல் வெளிவந்த காந்தாரா 400 கோடிகளை அள்ளியது. தற்போது வெளியாகியுள்ள காந்தாரா 2 இதுவரை 700 கோடி வசூலை தொட்டிருக்கிறது. இன்னமும் பல தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
கங்குவா படத்தின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் சமூக வலைதளங்களில் வெளியான நெகட்டிவ் விமர்சனங்கள், ட்ரோல்கள் மற்றும் மீம்ஸ்கள். காந்தாரா படத்தின் வெற்றிக்கு காரணம் சமூக வலைத்தளங்களில் கிடைத்த பாராட்டுக்களும், விமர்சனங்களும்தான்.