Kantara Chapter 1: இன்னொரு தேசிய விருது பார்சல்!.. காந்தாரா சாப்டர் 1 முழு விமர்சனம்!…
Kantara 2: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 3 வருடங்களுக்கு முன்பு வெளியான கந்தாரா திரைப்படம் 18 கோடி பட்ஜெட்டில் உருவாகி 400 கோடி வசூலை அள்ளியது. எனவே,அதற்கு முந்தைய கதை அதாவது Kantara chaper 1 படத்தை அதிக பட்ஜெட்டில் ரிஷப் ஷெட்டி உருவாக்கியுள்ளார். இந்த படத்திலும் அவரே முக்கிய வேடத்தில் நடிக்க ருக்மணி வஸந்த், ஜெயராம், குல்ஷன் தேவையா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இன்று காலை இப்படம் ரிலீஸான நிலையில் படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.
காந்தாரா முதல் பாகத்தின் இறுதியில் தன் அப்பா காட்டுக்குள் திடீரென எப்படி காணாமல் போனார் என சிறுவன் கேட்பது போல் காட்சி முடியும். kantara chapte 1 படத்தை அங்கிருந்தே துவங்குகிறார்கள். முன்னோர்கள் அப்படி காணாமல் போனதற்கு ஒரு புராணக்கதையை சொல்கிறார்கள். பல நூறு வருடங்களுக்கு முன்பு ஈஸ்வர பூந்தோட்டம் என்கிற இடத்தில் பழங்குடியினர் வசிக்கிறார்கள்.
அதன் மகத்துவம் பற்றி தெரிந்துகொண்ட பாந்தோரா மன்னன் அங்கு சென்று கைப்பற்ற நினைக்கிறான். ஆனால், அங்குள்ள தெய்வ சக்தி அவனை கொன்றுவிட அவனின் மகன் மட்டும் அங்கிருந்து தப்பிக்கிறான். அதன்பின் பல வருடங்கள் கழித்து அந்த மன்னர் குடும்பம் மீண்டும் ஈஸ்வர பூந்தோட்டத்தை கைப்பற்றும் முயற்சியில் இறங்க என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
முதல் பாகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு கதையை ரிஷப் ஷெட்டி சொல்லியிருக்கிறார். முதல் பாகத்தில் நிலத்தின் முக்கியத்துவம் என்றால் இந்த பாகத்தில் நிலத்தில் உள்ள தெய்வத்தின் சக்தியை பேசுகிறார்கள். பழங்கால, தொன்ம கதையை நவீன சினிமா மொழியில் சிறப்பாக திரையில் கடத்தியுள்ளனர். உலகத்தில் அநியாயம் தலை தூக்கும்போது தெய்வம் வந்து காக்கும் என்பதை இந்த படத்திலும் காட்டியுள்ளனர்.
இயக்குனராகவும், நடிகராகவும் தனது பணியை ரிஷப் ஷெட்டி சிறப்பாக செய்திருக்கிறார். அவர் அறிமுமாகும் காட்சியும், சண்டை கட்சியில் அவரின் வேகமும் ரசிகர்களுக்கு விருந்துதான். அவருக்கு ஜோடியாக வரும் ருக்மணி வஸந்த் அழகாக இருக்கிறார். கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறார். இந்த படத்திற்கு பெரிய பலம் அஜனீஸ் லோக்நாத்தின் ஒளிப்பதிவு. அதேபோல், கலை இயக்குனர் பங்கலான் உழைப்பை கொட்டியிருக்கிறார். படத்தில் வரும் VFX காட்சிகள் படத்திற்கு பெரிய பலம். இடைவேளை காட்சியும்,, படத்தின் கடைசி 20 நிமிடமும் ரசிகர்களுக்கு கூஸ் பம்ப்ஸ்தான். தமிழில் ரிஷப் ஷெட்டிக்கு குரல் கொடுத்துள்ள நடிகர் மணிகண்டனை பாராட்டியே ஆகவேண்டும்.
இந்த படத்தின் ஒளிப்பதிவு, கலை, சண்டை காட்சிகள் ஆகியவற்றுக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்புண்டு. அதேபோல், Kantara முதல் பாகத்திற்கு தேசிய விருது வாங்கிய ரிஷப் ஷெட்டி இந்த படத்திற்காகவும் தேசிய விருது வாங்குவார் என கணிக்கப்படுகிறது.
படத்தில் நிறைய பிளஸ் இருந்தாலும் குறைகளும் இருக்கிறது. முதல்பாதியில் சில காட்சிகள் திரும்ப திரும்ப வருவது போன்ற உணர்வு வருகிறது. படத்தின் இறுதிக்காட்சியில் வரும் போர்க் காட்சியை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். அதேபோல், கடவுள் நம்பிக்கை தொடர்பான காட்சிகளில் கொஞ்சம் லாஜிக் இல்லாமல் இருக்கிறது. இப்படி சில குறைகள் இருந்தாலும் கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க கூடிய படமாக Kantara Chapter 1 வெளிவந்திருக்கிறது.
கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று காந்தாரா சாப்டர் 1 படத்தை ரசிக்கலாம்!…
Rating: 3.5/5
