ஒரே கதையை எடுக்கும் மூனு இயக்குனர்கள்!.. இதுக்கா இவ்ளோ பில்டப்பு!...
மெட்ரோ திரைப்படத்திற்கு பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. சூர்யாவுக்கு கடந்த சில படங்கள் கை கொடுக்காத நிலையில் இந்த படம் அவருக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த படம் ஜனரஞ்சகமான கமர்சியல் மசாலா திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் வெளியிடவிருக்கிறார்கள்.
அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா முக்கிய இடத்தில் நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சுந்தர்.சி-யும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அடுத்து இந்திய சினிமா உலகமே எதிர்பார்க்கும் ராஜமௌலியின் வாரணாசி படம் மிகப்பெரிய ஹைப்பை உருவாக்கி இருக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசரும் வெளியானது. அதில் சிவபெருமானை போல சூலாயுதம் வைத்துக்கொண்டு மகேஷ் பாபு காளையில் அமர்ந்து வரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும் ராமாயண போர் நடக்கும் காலகட்டத்தையும் காட்டி இருந்தார்கள். எனவே இது ஒரு டைம் லூப் கதையாக இருக்கலாம் என்றெல்லாம் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில்தான் கருப்பு, மூக்குத்தி அம்மன் 2, வாரணாசி ஆகிய மூன்று படங்களின் கதையும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பது தெரிய வந்திருக்கிறது. கருப்பு படத்தில் முன்னொரு காலத்தில் கருப்பசாமியாக இருக்கும் சூர்யா நிகழ்காலத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். ஆனால் அநியாயம் தலை துக்கும் போது படத்தின் இறுதி காட்சியில் அவர் கருப்பசாமியாக மாறுவது போல கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
மூக்குத்தி அம்மன் 2வில் அம்மன் சாமியாக இருந்த நயன்தாரா நிகழ்காலத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். படத்தின் இறுதி காட்சியில் வில்லனை அழிக்க அவர் மீண்டும் அம்மனாக அவதாரம் எடுப்பார் என்கிறார்கள்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள வாரணாசியில் முன்னொரு காலத்தில் ராமனாக இருக்கும் மகேஷ் பாபு பல ஜென்மங்களுக்கு பின் மனிதனாகப் பிறந்து ஒரு கட்டத்தில் சிவனாக அவதாரம் எடுப்பார் என்கிறார்கள்.
இப்படி படத்தின் ஒருவரிக்கதை ஒரே மாதிரியாக இருந்தாலும் ஆர்.ஜே பாலாஜி, சுந்தர்.சி, ராஜமௌலி ஆகிய மூவரும் தங்களின் ஸ்டைலில் திரைக்கதை அமைத்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
