சூர்யாவுக்கு கை கொடுத்தாரா கருப்பு சாமி.. சாமியாட வைத்த சாய் அபயங்கர்.. கருப்பு விமர்சனம்!
சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் தியேட்டரில் வெளியாகி இருந்தால் பாக்ஸ் ஆபீஸில் சூர்யாவுக்கு வேறலெவல் மார்க்கெட் இந்நேரம் உருவாகியிருக்கும். மீண்டும் தியேட்டரில் வெளியான எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ உள்ளிட்ட படங்கள் அன்பான ஃபேன்ஸை மட்டுமே கவர்ந்தன. ஆனால், ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தியேட்டரில் சாமியாட வைக்கும் வேலையை சாய் அபயங்கர் உதவியுடன் ஆர்ஜே பாலாஜி நடத்தி காட்டி சூர்யாவுக்கு ஒரு கம்பேக் படமாக கருப்பு படத்தைக் கொடுத்துள்ளார்.
அதே மூக்குத்தி அம்மன் டெம்பிளேட்டை வைத்து விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதை தான் கருப்பு என்பது தெரிகிறது. த்ரிஷாவை வைத்து மாசாணியம்மன் என ஆர்ஜே பாலாஜி இயக்க நினைத்த கதையும் இதுவாகவே இருக்கலாம்.
விஜய் கருப்பு படத்தில் நடித்திருந்தால், இப்போ அவர் சிஎம் ஆகியிருப்பதற்கு இன்னமும் படத்தை கொண்டாடியிருப்பார்கள். இந்த படத்தை நேற்று வரவிடாமல் தடுத்ததிலும் ஏதாவது அரசியல் இருக்கும் என தியேட்டரிலேயே ரசிகர்கள் கூறுகின்றனர்.
சூர்யா ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சர்ப்ரைஸ் ட்ரீட்கள் படம் முழுக்க காத்திருக்கிறது. கருப்பசாமியாக சூர்யா வரும் இடங்களும், கோட் சூட் போட்டுக் கொண்டு சரவணன் வக்கீலாக வந்து கடவுள் சக்தி ஏதும் இல்லாமல் வாதாடும் இடங்களும் டாப் நாட்ச்.
நோய் வாய்ப்பட்ட பெண்ணை காப்பற்ற போராடும் அப்பா கேரளாவில் இருந்து தங்க நகைகளுடன் சென்னைக்கு அறுவை சிகிச்சை செய்ய வர அவருக்கும் அவரது மகளுக்கும் ஏற்படும் அநீதியை தட்டிக் கேட்க வரும் கருப்பசாமி அதன் பிறகு மக்களின் குறைகளை எப்படியெல்லாம் சரி செய்கிறார். நீதித் துறையில் இருக்கும் சட்ட ஓட்டைகளை அடைத்தாரா? இல்லையா? என்பது தான் கருப்பு படத்தின் கதை.
த்ரிஷா ப்ரீத்தி எனும் வழக்கறிஞராக நடித்துள்ளார். பேபி கண்ணன் எனும் வில்லன் லாயராக ஆர்ஜே பாலாஜி கருப்பசாமியையே லாக் செய்யும் விதம் அருமை.
சில இடங்களில் அல்ல பல இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், சாமி படங்களில் லாஜிக் எதற்கு மேஜிக் இருந்தால் போதும் என நினைக்கும் ரசிகர்களுக்கு கருப்பு படம் கண்டிப்பாக பிடித்து விடும். லாஜிக் தேடும் ஆடியன்ஸையும் விஷுவல் ட்ரீட் மூலம் ஆர்ஜே பாலாஜி பல இடங்களில் கட்டிப்போட்டு கல்லா கட்டுகிறார்.
கருப்பு - நீதிக்கடவுள்
ரேட்டிங் - 3.75
