TVK Vijay: இறந்தவரின் தந்தையை உள்ளே விடாத தவெகவினர்!.. குளறுபடியின் பின்னணி!...
நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் சென்ற போது அவரை நேரில் பார்ப்பதற்காக பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடிவிட்டதால் விஜய் வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
விஜய் தாமதமாக வந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம். அதோடு அந்த கூட்டத்தை தவெக நிர்வாகிகள் முறையாக திட்டமிடவில்லை என்றெல்லாம் திமுகவினர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தனர். ஒருபக்கம் கடந்த ஒரு மாத காலமாகவே கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என்கிற விமர்சனமும் எழுந்தது. விஜயும் கடந்த ஒரு மாதமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
கிட்டத்தட்ட தவெக கட்சி கடந்த ஒரு மாதமாக முடங்கிப் போயிருந்தது. தற்போது விஜய் அதிலிருந்து மீண்டு வர துவங்கியிருக்கிறார்.சில நாட்களுக்கு முன்பு கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரோடு விஜய் வீடியோ காலில் பேசினார். மேலும் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினரின் வங்கி கணக்குகளில் 20 லட்சம் ரூபாய் தவெக சார்பில் செலுத்தப்பட்டது.

ஒருபக்கம் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தை சந்திக்கும் ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக காவல்துறையிடம் தவெக சார்பில் அனுமதியும், சில கோரிக்கைகளும் வைக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில்தான் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சென்னையில் வைத்து சந்திக்கும் ஏற்பாடுகள் நடந்தது. அதன்படி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கரூரில் பாதிக்கப்பட்ட 37 குடும்பத்தினர் நேற்றே வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
இன்று காலை 10 மணிக்கு மேல் விஜய் அங்கு சென்று ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனி அறைகளில் சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவர்களின் தேவைகளையும், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் கோரிக்கைகள் என்ன என்பதையும் கேட்டறிந்தார்.இந்நிலையில், கரூரில் விஜயை நேரில் பார்க்க போய் உயிரிழந்த மோகன் என்பவரின் தந்தையை ஹோட்டலுக்குள் அனுமதிக்காததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவர் ஹோட்டல் வாசலில் காத்திருந்தார். அதன்பின் இறந்து போன மகனின் இறப்பு சான்றிதழை காட்டிய பின்பு தவெகவினர் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
தற்போது தவெக தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் ‘உள்ளே அனுமதிக்கவில்லை என சொல்லப்பட்ட கந்தசாமி என்ற நபர் உயிரிழந்த மோகனின் தந்தை என்றாலும் அவர் தனது மனைவி அதாவது மோகனின் தாயாரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். உயிரிழந்த மோகன் அவரின் தாயாருடன் வசித்து வந்தார். எனவே தவெக சார்பில் 20 லட்சம் மோகனின் தாயாரின் வங்கி கணக்கில் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டது. அதன் அடிப்படையில் மோகனின் தாயாருக்கு மட்டுமே ஆறுதல் தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
