நம்ம வீட்டுப் பிள்ளை சிவகார்த்திக்கேயன்! ... பேர் சொல்லும் பிள்ளை கவின்!...
நடிகர் கவின் நடிப்பில் இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு 'பேர் சொல்லும் பிள்ளை' என பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதன் பூஜை விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. பூஜை நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த தலைப்பு, நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்த 1980-களின் 'பேர் சொல்லும் பிள்ளை' திரைப்படத்தின் தலைப்பை நினைவூட்டுவதால், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தண்டட்டி' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம் சங்கையா இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் கவினுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நடிக்கிறார். 'லப்பர் பந்து' படத்தின் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற அவர், பின்னர் சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக களமிறங்குகிறார்.

மேலும், நகைச்சுவை நடிகர் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், நயன்தாராவுடன் கவின் நடித்துள்ள 'ஹாய்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த புதிய படத்தின் பணிகளும் தொடங்கியுள்ளன.

'ஸ்டார்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, கவின் நடித்த 'கிஸ்', 'மாஸ்க்' உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. எனினும், வித்தியாசமான கதைக்களத்துடன் 'பேர் சொல்லும் பிள்ளை' திரைப்படம் மூலம் கவின் மீண்டும் கம் பேக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
