Categories: Cinema News latest news throwback stories

மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளை நாலே வரிகளில் அடக்கிய கவியரசர்!.. எந்தப்படம்னு தெரியுமா?

கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் எல்லாமே ஆழமான அர்த்தம் பொதிந்தவை. இல்வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல கருத்துகளை தமது பாடலில் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல வெகு யதார்த்தமாகவும் நயம்படவும் சொல்லியிருப்பார். அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் இது. நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவுக்காக எழுதப்பட்ட இந்தப் பாடலை ரசிக்காதவர்களே இல்லை எனலாம். கவலை இல்லாத மனிதன் என்ற படத்திற்காக இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது.

பிறக்கும்போதும் அழுகின்றாய் என்று தொடங்குகிறது இந்தப் பாடல். பாடலின் பல்லவியில் பிறக்கும்போதும் மனிதன் அழுகிறான். இறக்கும்போதும் அழுகிறான். அதே போல அவன் ஒருநாள் கூட கவலை இல்லாமல் அவன் இருந்ததில்லை. ஏதாவது ஒரு காரணத்திற்காகக் கவலை வந்துவிடுகிறது. அதனாலேயே அவன் சிரிக்கவும் மறந்துவிடுகிறான் என்று யதார்த்தத்தைத் தோலுரித்துக் காட்டுகிறார். அதனால் தான் படத்திற்கே கவலை இல்லாத மனிதன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முதல் சரணத்தில் இரவின் கண்ணீர் பனித்துளி என்பார். முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார். இயற்கை அழுதால் உலகம் செழிக்கும். மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் என்று அழகுபட அனைவருக்கும் எளிமையாகப் புரியும் வகையில் சொன்னது கண்ணதாசனுக்கே உரிய ஸ்டைல். இவ்வளவு ஆழமான பொருளையும் எளிய வார்த்தைகளில் அடக்கி விடுகிறார். அதாவது இயற்கை அழுவது என்பது மழை பொழிவதைத் தான் இங்கு குறிப்பிடுகிறார். அப்போது நாடெல்லாம் செழிக்கும். ஆனால் மனிதன் அழுவதைப் பார்த்து அந்த இயற்கையே சிரிக்கும் என்று அழகாக முரண்தொடையை இங்கு கையாண்டுள்ளார் கவிஞர்.

KIM

பாடலின் 2வது சரணத்தில் நாலே வரிகளில் வாழ்க்கையை புட்டு புட்டு வைத்து விடுகிறார். அன்னையின் கையில் ஆடுவதில் இன்பம், கன்னியின் கையில் சாய்வதும் இன்பம், தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம், தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்… இதை விட எளிதாக வேறு எவராலும் சொல்லிவிட முடியாது. இவ்வளவு தான் வாழ்க்கை என்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

பாடலில் அழுகை என்பது வலியை ஏற்படுத்தும் என்பது உண்மை தான். அதற்காக அழுது கொண்டே இருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. சிரித்து வாழுங்கள். அதுதான் உடலுக்கும் மனதுக்கும் வலிமை என்று சொல்லாமல் சொல்கிறார். அதே நேரம் இரவின் கண்ணீர் பனித்துளி, முகிலின் கண்ணீர் மழை என்று சொன்னத கவிஞரின் தற்குறிப்புக் கற்பனையைக் குறிக்கிறது. அது மட்டுமல்லாமல் பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற 4 நிலைகளையும் கடைசி நான்கு வரிகளில் கையாண்டிருப்பதைக் கவனித்துப் பாருங்கள்.

அதாவது தாயுடன் இருப்பது பிரம்மச்சரியம். மனைவியுடன் சேர்வது கிருகஸ்தம். தன்னை அறிவது வானப்பிரஸ்தம். தன்னலம் மறந்து உண்மையை அறவது பேரின்பம். இங்கு தான் கவியரசர் கண்ணதாசன் தன் வைர வரிகளால் உயர்ந்து நிற்கிறார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v