இந்தப் படத்துக்காக 7 வருஷம் காத்திருந்தேன்! கீர்த்தி சுரேஷ் உருகுவது ஏன் தெரியுமா?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷின் கிராஃப் `மகாநடிகை’ படத்துக்குப் பிறகு தேசிய அளவில் உயர்ந்தது. இந்தப் படத்துக்காக அவருக்குத் தேசிய விருதும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து படங்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது மகேஷ் பாபுவுடன் ஒரு படம் உள்பட சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில், தனது தந்தை சுரேஷ் குமார் - தாய் ரேவதி ஆகியோர் நடிக்கும் புதிய படமொன்றில் நடிக்கிறார். `வாஷி’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மலையாளப் படத்தின் போஸ்டரை நடிகர் மோகன்லால் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். டோவினோ தமாஸ் ஹீரோவாக நடிக்கும் வாஷி படத்தின் போஸ்டரை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், இந்தப் படத்துக்காக 7 வருடங்களாகக் காத்திருந்ததாகவும் உருகியிருக்கிறார்.
`இந்தப் படம் நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு எனது மனதுக்கு நெருக்கமானது. ஒரு பெண் குழந்தைக்குத் தனது தந்தை தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசையாக இருக்கும். இது எளிதாக நடக்க் கூடியதுதானே என்று நினைக்கலாம். ஆனால், அது உண்மையல்ல. இந்தப் படத்துக்காக 7 ஆண்டுகளாக நான் காத்திருந்தேன். இப்போது எல்லாம் கைகூடி வந்திருக்கிறது’’ என்று எமோஷனலாக கீர்த்தி இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.