நீங்க செஞ்சது சரியா? விராட் கோலி, தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய கேரளா கோர்ட்
ஆன்லைன் ரம்மி விளையாட்டைப் பிரபலப்படுத்தும் விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக கேரள நீதிமன்றம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
Thu, 28 Jan 2021

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்யும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன. இதனால், ஆன்லைன் ரம்மியை இந்தியாவின் பல மாநிலங்கள் தடை செய்திருக்கின்றன. தமிழகத்திலும் அதற்கான தடை இருக்கிறது. இதேகோரிக்கையுடன் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆன்லைன் ரம்மி இளைஞர்கள் பலரின் வாழ்வைச் சீரழிப்பதாகவும், அதனால் அதைத் தடை செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கேரளாவில் ஆன்லைன் ரம்மியைப் பிரபலப்படுத்தும் விளம்பரங்களில் நடித்தது குறித்து விளக்கமளிக்கும்படி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதேபோல், கேரள நடிகர் அஜூ வர்கீஸூக்கும் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.