பேட்மிண்டன் கதைக்களத்தில் KPY பாலா... ‘ரீமேட்ச்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
தமிழ் சினிமாவில் இதுவரை பெரிதாக பேசப்படாத பேட்மிண்டன் விளையாட்டை மையமாகக் கொண்டு புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. ‘ரீமேட்ச்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், இளமை, காதல் மற்றும் விளையாட்டு உணர்வுகளை இணைக்கும் வகையில் உருவாகும் முதல் தமிழ் பேட்மிண்டன் திரைப்படமாக கவனம் ஈர்த்துள்ளது.
இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரும் சமூக சேவகருமான KPY பாலா கதாநாயகனாக நடித்துள்ளார். ‘கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற அவர், ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது தனது அடுத்த கட்ட முயற்சியாக ‘ரீமேட்ச்’ படத்தை தேர்வு செய்துள்ளார்.

பள்ளி பருவத்திலிருந்தே பேட்மிண்டனில் தீவிர ஆர்வம் கொண்ட பாலா, மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், பேட்மிண்டன் பின்னணியில் உருவாகும் இந்தக் கதையுடன் தனிப்பட்ட முறையிலும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் மூலம் நடிகை தானு ஹர்ஷா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நாடகக் கலைஞர் மற்றும் மாடலாக அறியப்படும் அவர், கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், சிறந்த பேட்மிண்டன் வீராங்கனையாகவும் திகழ்கிறார்.

படத்தில் இளவரசு, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், செல் முருகன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.
‘ரீமேட்ச்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஆர். விமல் குமார் இயக்குகிறார். இவர் BOFTA திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை மற்றும் இயக்கப் பிரிவில் விருது பெற்றவர். மேலும், இயக்குநர் ராதா மோகனின் ‘காற்றின் மொழி’, ‘பொம்மை’ போன்ற படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கவுள்ளார்.
‘ரீமேட்ச்’ திரைப்படத்தை Zinema Media and Entertainment Ltd சார்பில் தினேஷ் ராஜ், பிரகாஷ் சேஷாத்ரி மற்றும் ஜி. ரவி குமார் இணைந்து தயாரிக்கின்றனர். Creative Entertainers & Distributors நிறுவனத்தின் ஜி. தனஞ்செயன் படத்தின் க்ரியேட்டிவ் மற்றும் லைன் புரொடக்ஷன் பணிகளை மேற்பார்வை செய்கிறார்.
படத்தின் பூஜை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, நடிகை மீனா, இயக்குநர்கள் சசி, ராதா மோகன், ஆர். கண்ணன், நடிகர் கதிர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, 2026 அக்டோபருக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, காதல் மற்றும் இன்றைய தலைமுறையின் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் ‘ரீமேட்ச்’ ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
