விடாமுயற்சியும் போச்சா!.. தொடர்ந்து அடி வாங்கும் லைக்கா!.. இப்படியே போனா கடை காலிதான்!..

Vidaamuyarchi: இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரனுக்கு லண்டனில் செல்போன் சிம், நெட்வொர்க் உள்ளிட்ட சில தொழில்கள் உண்டு. அந்த தொழில் நன்றாகவே போய்கொண்டிருந்தாலும் சினிமா மீது உள்ள ஆர்வத்தில் அந்த துறையிலும் நுழைய ஆசைப்பட்டார். அப்படி அவர் தயாரித்த முதல் படம் விஜய் நடித்த கத்தி. சுபாஷ்கரன் இலங்கை என்பதால் கத்தி படம் வெளியானபோது சீமான் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு காட்டினார்கள்.
ஆனால், பெரிய நடிகர்களை வளைத்து அதிக பட்ஜெட்டுகளில் படங்களை தயாரித்து கோலிவுட்டில் கால் ஊன்றியது சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம். இந்த நிறுவனம் தயாரித்த பல படங்கள் நல்ல லாபத்தையும் கொடுத்தது. எனவே, ரஜினியை வைத்து 2.0 படத்தை தயாரித்தது. அந்த படமும் அவர்களுக்கு லாபம்தான்.
அதேநேரம், அதிக பட்ஜெட்டுகளில் எடுக்கப்படும் படங்கள் ஃபிளாப் ஆகிவிட்டால் பல கோடி நஷ்டம் ஏற்படும். கடந்த சில வருடங்களாகவே லைக்கா நிறுவனம் தோல்வியை சந்தித்து வருகிறது. கடைசியாக மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் மட்டுமே கடைசியாக அந்நிறுவனத்துக்கு லாபத்தை கொடுத்தது.
ரஜினியை வைத்து தயாரித்த தர்பார், கமலை வைத்து எடுத்த இந்தியன் 2, ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம். மீண்டும் ரஜினியை வைத்து எடுத்த வேட்டையன் போன்ற படங்கள் எல்லாமே லைக்கா நிறுவனத்துக்கு நஷ்டத்தையே கொடுத்தது. இதனால்தான் அஜித்தை வைத்து எடுத்த விடாமுயற்சி படமும் பல நாட்கள் படபிடிப்பு நிறுத்தப்பட்டது.
லைக்கா நிறுவனம் கடனில் சிக்கியதால்தான் பொங்கலுக்கு விடாமுயற்சியை வெளியிட முடியாமல் போனது. ஒருவழியாக இப்படம் கடந்த 6ம் தேதி வெளியானது. ஆனால், இந்த படம் ரசிகர்களை கவராததால் இந்த படமும் லைக்காவுக்கு ஒரு தோல்விப்படமாக அமைந்துவிட்டது.
விடாமுயற்சி படத்தால் லைக்காவுக்கு கிட்டத்தட்ட 200 கோடி நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள். இப்படி போனால் லைக்கா நிறுவனம் விரைவில் சினிமா தயாரிக்கும் தொழிலில் இருந்தே வெளியேறி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது, பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் என்பதை விட்டுவிட்டு சின்ன பட்ஜெட் படங்களை மட்டுமே தயாரிக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.