ஆமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. குழந்தைக்கு நான்தான் அப்பா.. ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்...
                                    
                                சமையல் கலை நிபுணராக மக்களிடம் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் ஒரு தொழிலதிபர். வி.ஐ.பிக்கள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு இவரின் டீம்தான் பல வெரைட்டிகளில் உணவு சமைத்துக் கொடுக்கிறார்கள். இது தொடர்பான பல வீடியோக்களை இவர் வெளியிட்டிருக்கிறார். ஒரு பக்கம் மெஹந்தி சர்க்கஸ் என்கிற திரைப்படத்திலும் ரங்கராஜ் நடித்திருக்கிறார். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவர் ஜட்ஜாக இருக்கிறார்.
ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில், இவருக்கும் சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரியும் ஜாய் கிரிசில்டா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. சில மாதங்களுக்கு முன்புதான் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

அதோடு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சொல்லி திருமண கோலத்துடன் இருவரும் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அதன்பின் இரண்டு மாதங்கள் கழித்து மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை தன்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். அவரை சந்திக்கப்போனால் அடித்து துன்புறுத்துகிறார் என காவல் நிலையத்தில் புகாரளித்தார். எனவே, இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதோடு டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஜாய் கிரிசில்டா தொடர்ந்து ரங்கராஜை சீண்டி வந்தார். எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ரங்கராஜ் ‘தன்னை பற்றி ஜாய் கிரிசில்டா அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும். இதனால் எனக்கு தொழில்ரீதியாக பல கோடி நஷ்டம்’ என்றும் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான் சமீபத்தில் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அது தொடர்பான சில புகைப்படங்களை வெளியிட்டு ‘அப்பாவைப் போலவே இருக்கிறார். ஆனால் அப்பா என்று சொல்லிக் கொள்வதற்கு அவருக்கு தகுதி இல்லை’ என்றெல்லாம் பதிவிட்டார் ஜாய் கிரிசில்டா. ஒருபக்கம் இந்த விவகாரத்தை மகளிர் ஆணையமும் விசாரித்து வந்தது.
இந்நிலையில் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை மகளிர் ஆணையத்தின் முன் ஒப்பு கொண்டிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். அதோடு, ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தந்தை நான்தான் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார். ரங்கராஜ் ஒப்புக்கொண்டதால் டிஎன்ஏ ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தைகளை பராமரிப்புக்கு தேவையானதை ரங்கராஜ் செய்ய வேண்டும் எனவும் என தெரிவித்த மகளிர் ஆணையம் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருக்கிறது.
