இந்திரன்ஸ் ஜோடியான மதுபாலா!.. சின்ன் சின்ன ஆசை!.. வேறலெவல் அப்டேட்!..

 
indrans

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்ற மலையாள நடிகர் இந்திரன்ஸ், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள 'சின்ன சின்ன ஆசை' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

மலையாள திரையுலகில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இந்திரன்ஸ், தனது நீண்டகால திரைப்பயணத்தில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர். தற்போது அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'சின்ன சின்ன ஆசை' திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் ஜூன் 19, 2026 அன்று வெளியாக உள்ளது.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இந்திரன்ஸ், "இந்தப் படத்தின் ஹீரோ யார் என்று கேட்டால் என் பெயரை சொல்ல வேண்டாம், இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறுங்கள் என சொல்ல நினைத்தேன். காரணம், இதற்கு முன் நான் நடித்த கதாபாத்திரங்களையும் என் தோற்றத்தையும் பார்த்து பல நடிகைகள் என்னுடன் இணைந்து நடிக்க மறுத்துள்ளனர். ஆனால் மது பாலா இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

'சின்ன சின்ன ஆசை' திரைப்படத்தை இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கியுள்ளார். வாரணாசி நகரை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், ஒரே நாளில் சந்திக்கும் இரண்டு அந்நியர்களுக்கு இடையே உருவாகும் தூய்மையான நட்பை மையமாகக் கொண்ட மனதைத் தொடும் கதையாக உருவாகியுள்ளது.

இந்திரன்ஸுடன் இணைந்து மது பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா மற்றும் காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியாகியுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது.

இந்திரன்ஸ், தமிழ் சினிமாவில் இதற்கு முன் நண்பன் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் அவர், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனுஷின் 55-வது திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் தனுஷ் மற்றும் மம்முட்டி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

மலையாள திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய இந்திரன்ஸ், தற்போது தமிழ் ரசிகர்களிடமும் தனது இயல்பான நடிப்பு மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் தொடர்ந்து கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web