×

அதிரி புதிரி வெற்றியைத் தந்த மலைடா...அண்ணாமலை..! 28 ஆண்டுகளைக் கடந்தும்...பேச வைக்கும் படம்...!

 
an2

படம் ஆரம்பித்ததுமே ரஜினியை சூப்பர் ஸ்;டார் என சீரியல் லைட் எழுத்தோடு காட்ட ஆரம்பித்ததில் ஆரம்பித்து படம் முடியும் வரை தியேட்டரில் விசில் சத்தமும், கைதட்டலும் காதைப் பிளக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட மெஹா ஹிட் படம்தான். அண்ணாமலை...அண்ணாமலை 1992ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, ஜனகராஜ், சரத்பாபு, நிழல்கள் ரவி, வினுசக்கரவர்த்தி, வைஷ்ணவி, ரேகா உள்பட பலர் எனப் பலரும் நடித்துள்ளனர். தேவா இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கௌப்புகின்றன. 

வந்தேன்டா பால்காரன், அண்ணாமலை அண்ணாமலை, கொண்டையில் தாழம்பூ, ஒரு பெண் புறா, ரெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள், வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் ஆகிய பாடல்கள் மெகா ஹிட்.

டேய் அசோக் இன்னிக்கு உன் வீட்டு காலண்டர்ல தேதிய குறிச்சி வச்சிக்கோ...என ரஜினி பேசும் நீண்ட டயலாக் படத்தின் உச்சக்கட்ட வெற்றிக்கான வசனம்...இன்று வரை இது போல் எந்தப்படமும் வந்ததில்லை. ஒரு ஹீரோவின் படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எத்தனையோ படங்கள் உதாரணமாய் இருக்கின்றன. அப்படி ஹீரோயிஸத்துடன் வந்த படங்கள்தான், மாஸ் 

படங்கள் என்று கொண்டாடப்பட்டு வருகின்றன. கலெக்‌ஷனிலும் படம் மாஸ்;. மக்களின் மனங்களிலும் மாஸ் தான். பைரவி, பில்லா, முரட்டுக்காளை போன்ற படங்கள் ரஜினியை கமர்ஷியல் கோட்டைக்குள் அழைத்துச் சென்றது. தொடர்ந்து அப்படியான படங்கள் வந்தன. வசூலை வாரிக் குவித்தன. நூறு படங்களைக் கடந்து செல்கையில் ரஜினி தன் ஆசைக்காக ‘ராகவேந்திரர்’ 

படத்தில் செஞ்சுரி போட்டார். தொடர்ந்து கமர்ஷியல் படங்களாக நடித்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆனார். இந்த மாஸ் ஹீரோயிச ஆரம்பத்தின் உச்சக்கட்டம் தான் அண்ணாமலை’.

கே.பாலசந்தரின் ‘கவிதாலயா’வுக்காக ரஜினி நடித்த படம்தான் ‘அண்ணாமலை’. படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் சுரேஷ் கிருஷ்ணாவை, தன் ‘சத்யா’ படத்தின் மூலம் இயக்குநராக்கினார் கமல். பின்னர், ‘இந்துருடு சந்துருடு’ என்ற தெலுங்குப் படத்தையும் சுரேஷ் கிருஷ்ணாவை இயக்க வைத்தார். இந்த ‘அண்ணாமலை’ படம், இப்படியொரு 

காலம் கடந்த படமாக நிற்கும் என நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினியே கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.
கதை வழக்கம்போல அரைத்த மாவு தான். அதை படமாக்கிய விதத்தில் மாஸ் காட்டினார் சுரேஷ் கிருஷ்ணா. தன் தனித்துவமான நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்தியது தான் ரஜினியின் கைவண்ணம்.

பால்கார அண்ணாமலைக்கும் பணக்கார அசோக்கிற்குமான நட்பில் ஆரம்பித்து பின்னர் துரோகத்தில் வெடித்து, தொழிலிலும் ஸ்டேட்டஸிலும் உயர்வுக்கு வந்து, ஜெயித்துக் காட்டுகிற கதைதான் ‘அண்ணாமலை’. படமோ பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. மலை டா 

அண்ணாமலை...என பேசும் ரஜினியின் பஞ்ச் டயலாக் படத்தின் உச்சக்கட்ட வெற்றியைத் தேடித் தந்தது. 

படத்தின் பிளஸ் பாயிண்டே சண்முகசுந்தரத்தின் கதையும் வசனமும் தான். ஒருபக்கம் ரஜினியின் குடும்ப சென்டிமென்ட், சரத்பாபுவுடன் நட்புப் பாசம், குஷ்புவைப் பார்ப்பதிலும் பாம்பு பார்ப்பதிலுமாக உள்ள காமெடி கலாட்டா. ராதாரவியின் சைலண்டான வில்லத்தனம், 

ரஜினியின் சபதம் என ஒரு மாஸ் படத்துக்குள் என்னென்ன அடங்கவேண்டுமோ அவை அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அதை காட்சியாக விரிவுபடுத்திக் கொண்டே வந்ததுதான் சுரேஷ்கிருஷ்ணாவின் சாமர்த்தியம்;.

பால்காரர், தோளில் துண்டு, சைக்கிள் என்று வலம் வருகிறார் அண்ணாமலை ரஜினி. இது சராசரி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட தோற்றம் தான். அந்த ரகசியத்தை ரஜினி தன் நாடித்துடிப்பால் உணர்ந்து கொண்டு படத்தை சி சென்டரிலும் ஓட வைக்க என்னென்ன மாயவித்தைகள் செய்ய வேண்டுமோ அத்தனை வித்தைகளையும் கனகச்சிதமாக செய்து முடித்துள்ளார். 

ரஜினிக்கு, அரசியல் குறித்த கோபங்களும் விமர்சனங்களும் அப்போதே இருந்திருக்கின்றன என்றே சொல்லலாம். படத்தைப் பார்க்கும் போது, அவர் யாரை விமர்சித்திருக்கிறார் என்பது புரியும். ரஜினி தொடைதட்டிப் பேசிய சபதம், இன்றைக்கும் மேடைகளில் மிமிக்ரி கலைஞர்கள் பேசி பலரால் பாராட்டப்படுகிறார்கள். 

கதை, திரைக்கதை, வசனம், காட்சிப்படுத்துதல், ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என அத்தனை அம்சங்களும் படத்தில் கனகச்சிதமாகக் கையாளப்பட்டிருக்கும்.அதேபோல், ரஜினியின் காஸ்ட்யூம் படத்திற்கு மற்றொரு பிளஸ். ‘பில்லா’வில் இருந்தே கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு நிறைய படங்களில் வலம் வந்தார் என்றாலும் 

‘அண்ணாமலை’யின் கோட், தனி ஸ்டைல் தான். அதிலும் அவர் அணியும் கூலிங்கிளாஸ் இன்னும் அதிகமாக ரசிகர்களை ரசிக்க தூண்டியது.

படத்தில் காட்டப்படும் மற்றொரு பிளஸ் பாயிண்ட் பில்டப். அதுவரை தலைவர் பதவியில் இருந்த சரத்பாபு இனி இல்லை என்பதும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அண்ணாமலை  தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்றும் அறிவிப்பு வரும். அதையடுத்து மிக ஸ்டைலாக ரஜினியின் நடந்து வரும் கால்களை, ரஜினியின் மார்பில் இருந்து படம் பிடித்திருப்பார்கள். 

அடுத்து பக்கவாட்டுப் பகுதியில் இருந்து ரஜினியின் நடை காட்டப்படும். பின்பகுதியில் இருந்து கேமரா ரஜினி நடையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து வரும். பின்னர் ரஜினியின் முகம் காட்டப்படும். ஸ்டைலாக நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போடுவார். வாயில் இருந்து சிகரெட் புகை பரவி வந்துகொண்டே இருக்கும்.

ராதாரவியும் சரத்பாபுவும் அங்கிருந்து கவிழ்ந்த முகத்துடன் வெளியேறுவார்கள். எஸ்கலேட்டரில் இறங்குவார்கள். ரஜினி பக்கத்து எஸ்கலேட்டரில் ஏறுவார். பின்னணியில், முன்பு செய்த சபத வசனம் ஓடிக்கொண்டிருக்கும். ரஜினி ஏறிவிடுவார். சரத்பாபு இறங்கியிருப்பார்.

அப்போது ரஜினி கை நீட்டுவார். விரல் சொடுக்குவார். பின்னணியில் ராதாரவி, சரத்பாபு. திரும்பி, அண்ணாந்து ரஜினியைப் பார்ப்பார்கள். ரஜினி எங்கோ பார்த்துக்கொண்டு, ஸ்டைலாகத் திரும்புவார். ‘மலடா... அண்ணாமலை’ என்று சொல்லிவிட்டு, அடுத்த காட்சிக்குச் சென்றுவிடுவார். திரையரங்கமே அதிர ஆரம்பிக்கும்.

படத்தில் ரஜினியின் அறிமுகப்பாடலான ‘வந்தேண்டா பால்காரன்’ பாட்டும் அதில் உள்ள தத்துவங் களும  பல தரப்பு மக்களையும் ரசிக்க வைத்தன. வைரமுத்து எல்லாப் பாடல்களிலும் ரெக்கை கட்டி பறந்திருப்பார். ‘ரஜினி எண்ட்ரி ஆகும்போது, ஒரு ஓபனிங் சாங் என்பது இந்தப்படத்தில் இருந்து தான் வந்தது. 

‘அண்ணாமலை அண்ணாமலை’ பாட்டும் ஹிட்டு. ‘வெற்றி நிச்சயம் வேத சத்தியம்’ பாட்டு, வெற்றி பெறத் துடிப்பவர்களுக்கு ஒரு பூஸ்டர். இதை படமாக்கிய விதமும் மிரட்டல்.‘கூட்டிக்கழிச்சுப் பாரு, கணக்கு சரியா இருக்கும்’ என்கிற ராதாரவியின் அசால்ட் வசனம், மிகப்பிரபலம். இந்தப்படத்தில் இருந்துதான் வில்லனுக்கு மேனரிஸம், வில்லனுக்கு பஞ்ச் 

டயலாக் என வந்தது. குஷ்பு, அப்போதைய காலகட்டத்தில் நல்ல மார்க்கெட்டில் இருந்தார். அவரது கால்ஷீட் கிடைப்பதே குதிரைக்கொம்பாகி விடும். அவருக்கு அண்ணாமலை ஒரு முக்கியமான படம். அவர் நடித்த படங்களில் இதுதான் மணிமகுடம் என்றே சொல்லலாம். அவரது பெயரையே 

படத்தின் பாடலில் பயன்படுத்தியிருப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ‘கொண்டையில் தாழம்பு...நெஞ்சிலே வாழைப்பூ...கூடையில் என்ன பூ...,?’ குஷ்பூ என்று வரும் அந்த வரிகள். 

அண்ணாமலை ரஜினியின் மார்க்கெட்டை மலையளவுக்கு உயர்த்தியது என்றால் அது நிதர்சனம்தான். அதேபோல் ரஜினி - தேவா - வைரமுத்து கூட்டணி ஒன்று உருவானதும் இங்கேதான். சுரேஷ்கிருஷ்ணாவை அடுத்த கட்ட உயரத்துக்கு அழைத்துச் சென்றதும் இந்த ‘அண்ணாமலை’தான்...

1992ம் ஆண்டு, ஜூன் மாதம் 27ம் தேதி வெளியானது ‘அண்ணாமலை’. திரையிட்ட  தியேட்டர்களிலெல்லாம் நூறுநாள், இருநூறு நாளைக் கடந்து ஹவுஸ்புல் கலெக்‌ஷனைக் கொடுத்தது.

தற்போது 28 வருடங்கள் ஆன பின்பும் இந்தப்படத்தைப் பற்றி ஊடகங்கள் பேசுகிறது என்பதே படத்தின் வெற்றிக்குச் சான்று. இன்னும் எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் இதுபோன்ற ஒரு மாஸ் வெற்றியைக் கொடுக்க முடியாது என்பதே திண்ணம். அதற்கு காரணமே ரஜினி என்னும் மாமந்திரம்தான்.

From around the web

Trending Videos

Tamilnadu News