Mandaadi Box office: சூரிக்கு ஹிட் கொடுக்குமா மண்டாடி?!.. முதல் நாள் வசூல் அப்டேட்!..
ஹீரோவாக மாறிய சூரி: வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் திரைப்படம் மண்டாடி. கடந்த சில வருடங்களாகவே சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார். பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த சூரி விடுதலை திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக நடிக்க துவங்கினார். அதன்பின் விடுதலை 2, கருடன், மாமன் போன்ற படங்களில் அவர் ஹீரோவாக நடித்தார். அந்த அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது..
மண்டாடி திரைப்படம்:இந்த நிலையில்தான் மண்டாடி திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் அவருடன் மகிமா நம்பியார், சுகாஷ், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சுமார் ரூ.75 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
படகு போட்டி ஹைலைட்ஸ்: மீனவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் மற்றும் கடலில் நடக்கும் படகு போட்டி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. சூரியின் நடிப்பு மற்றும் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை சிறப்பாக இருப்பதாகவும், குறிப்பாக படத்தில் வரும் படகு போட்டி தொடர்பான காட்சிகள் அசத்தலாக இருப்பதாகவும் ரசிகர்கள் சொல்கிறார்கள்..
கலவையான விமர்சனம்: அதேநேரம் அந்த படகு போட்டி காட்சிகளை தவிர்த்து பார்த்தால் படம் நன்றாக இல்லை, கதை, திரைக்கதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக உருவாக்கியிருக்கலாம், படம் கமர்சியலாக இல்லை எனவும் பலரும் சொல்கிறார்கள். எனவே மண்டாடி திரைப்படம் சூரிக்கு ஹிட் படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
படத்தின் வசூல்: இந்நிலையில் நேற்று வெளியான மன்றாடி திரைப்படம் ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.6.55 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் 5.55 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
