Connect with us

latest news

உலகப் படம்லாம் உங்களுக்குதான்!.. நாயகனை காலி செய்த மனிதன்!.. ஒரு அலசல்…

Manithan Vs Nayagan: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து 1987ம் வருடம் அக்டோபர் 21ம் தேதி வெளியான படம்தான் மனிதன். இந்த படத்தை ரஜினியை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். இந்த படத்தை பாரம்பரியம் மிக்க ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.

மனிதன் படத்தின் கதை:

விசி குகநாதன் எழுதிய கதைக்கு கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுதியிருந்தார். படத்தின் ஹீரோ ராஜா அமாவாசை நாளில் பிறக்கிறான். அமாவாசை அன்று பிறந்தால் அவன் குற்றவாளியாகவே இருப்பான் என அவனை சுற்றி இருப்பவர்கள் பேசுகிறார்கள். பள்ளியில் படிக்கும்போது இதையே ஆசிரியரும் சொல்ல அவரின் மீது பேப்பர் வெயிட்டை எடுத்து அடித்துவிட்டு சிறைக்கு போகிறான் ராஜா. அப்பா, அம்மா இல்லாத நிலையில் ராஜாவுக்கு இருக்கும் ஒரே சொந்தம் அவரின் அக்கா ஸ்ரீவித்யா. பல வருடங்களுக்கு பின் சிறையிலிருந்து வெளியே வரும் ராஜாவை சமூகம் ஒரு குற்றவாளியாகவே பார்க்கிறது. ஆனால், ராஜாவோ ஒரு சமூக ஆர்வலருடன் இணைந்து மக்களுக்காக வேலை செய்கிறார்.

ரகுவரனின் வில்லத்தனம்..

அப்போது தனது தங்கை போல பாவிக்கும் மாதுரியை வில்லன் ரகுவரன் கெடுத்துவிட அவரை அடித்து உதைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார் ரஜினி. ரகுவரனின் அப்பா வினுச்சக்கரவர்த்தி ஒரு அரசியல்வாதி. அவரும் ஓட்டுக்காக இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறார். ஆனால், மாதுரியை ரகுவரன் கொலை செய்துவிடுகிறார்.

அதோடு, துப்பாக்கி போன்ற ஆபத்தான பொருட்களை தயாரித்து விற்கும் தொழிலையும் செய்வதை ரஜினி கண்டுபிடிக்க அதன்பின் என்னவானது என்பதுதான் படத்தின் கதை. ரஜினிக்கு ஏற்ற ஒரு பக்கா மசாலா கமர்ஷியல் படமாக மனிதன் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது.

மனிதன் மனிதன் பாடலுக்கு ரஜினி சொன்ன ஐடியா!..

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரூபினி நடித்திருந்தார். மேலும், மறைந்த நடிகர் ஜெய் கணேஷ், சோ உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். இவரின் இசையில் உருவான ‘வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன், காளை காளை முரட்டுக்காளை, மனிதன் மனிதன்’ போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதில், மனிதன் மனிதன் பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். இந்த பாடலை ரிக்கார்டிங் செய்துவிட்டு சினிமாவில் பயன்படுத்தவில்லை. அந்த பாடலை ஏன் பயன்படுத்தவில்லை என ரஜினி இயக்குனரிடம் கேட்க ‘பாடலுக்கான சூழ்நிலை படத்தில் இல்லை’ என அவர் சொல்லியிருக்கிறார்.

வைரமுத்துவுக்கு வந்த எதிர்ப்பு….

அப்படியெனில் படத்தின் டைட்டில் கார்ட் வரும்போது இந்த பாடலை போடுங்கள் என ரஜினி சொல்ல அப்படியே செய்திருக்கிறார்கள். இந்த பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். இந்த பாடலில் ‘இரவில் மட்டும் தாலி கட்ட நினைப்பவன் மனிதனா’ என்கிற வரி வருகிறது. முஸ்லீம்கள் இரவில் திருமணம் செய்வார்கள் என்பதால் சில முஸ்லீம் அமைப்புகள் அப்போது வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவமும் நடந்தது.

நாயகனை தாண்டிய வசூல்…

இந்த படம் மணிரத்னம், கமல் இணைந்து உருவாக்கிய நாயகன் படம் வெளியான அதே தேதியில் வெளியானது. ஹாலிவுட்டில் உருவாக்கப்பட்டு உலக சினிமாவாக ரசிக்கப்பட்ட காட் ஃபாதர் படத்தை இன்ஸ்பிரேஸனாக கொண்டு இப்படத்தை இருவரும் உருவாக்கியிருந்தார்கள். ஆனால், நாயகன் படத்தை விட ரஜினியின் மனிதன் படம் அதிக வசூலை பெற்றதுதான் சினிமாவின் வரலாறு. அதேநேரம், தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் நாயகன் இப்போதும் இருக்கிறது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top