Categories: Cinema News latest news throwback stories

மனோரமா வாழ்வில் நடந்த அதிசயம்… சாமி கும்பிட்டவுடன் கிடைத்த கதாநாயகி வாய்ப்பு…

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்தவர் மனோரமா. இவர் பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தார் என்றாலும் இவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையும் ஆவார். மனோரமா தொடக்கத்தில் பல நாடக சபாக்களில் நடிகையாக இருந்தார். அவருக்கு சினிமாவில் கதாநாயகி வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஒரு முறை கண்ணதாசன் மனோரமாவிடம், “நீ நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்தால் உனக்கு நிறைய வாய்ப்புகள் வரும். கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என ஒற்றைக் காலில் நின்றால் வாய்ப்புகள் வராது” என அறிவுரை கூறி, அவரை “மாலையிட்ட மங்கை” என்ற திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்கவைத்தார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. எனினும் கதாநாயகியாக நடித்துவிட வேண்டும் என்ற ஆவல் இருந்துகொண்டே இருந்தது.  தனது மகள் கதாநாயகியாக நடித்துவிட வேண்டும் என்ற ஆசை மனோரமாவின் தாயாருக்கும் இருந்தது

Manorama

ஒரு முறை ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தனது தாயாருடன் கேரளா சென்றிருந்தார் மனோரமா. அப்போது குருவாயூர் கோவிலுக்கு சென்று தரிசித்து வரலாம் என்று இருவரும் குருவாயூர் கோவிலுக்கு சென்றனர். அங்கே பலர் விளக்கு ஏற்றிவைத்திருந்தார்கள். அங்கே இருந்த ஒருவரிடம் “எதற்காக இப்படி விளக்கு ஏற்றிவைத்திருக்கிறார்கள்” என மனோரமாவின் தாயார் கேட்க, அதற்கு அவர், “கடவுளிடம் நாம் வேண்டியது நிறைவேறிவிட்டால் இங்கு விளக்கு வைப்பார்கள்” என கூறினார்.

அப்போது மனோரமாவின் தாயார் தனது ஆசை நிறைவேற வேண்டும் என குருவாயூரப்பனை வேண்டிக்கொண்டார். அதன் பின் படப்பிடிப்பு முடிந்து தமிழ்நாட்டுக்கு திரும்பியபோது மனோரமாவின் வீட்டிற்கு ஒரு தந்தி வந்திருக்கிறது. அந்த தந்தி மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து வந்தது. அதில், “எங்களுடைய திரைப்படத்தில் உங்களை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம். அதனால் உடனடியாக சேலத்திற்கு புறப்பட்டு வாருங்கள்” என எழுதியிருந்தது.

Manorama

இதனை பார்த்தவுடன் மனோரமாவிற்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. அவரை விட அவரின் அம்மா, “நான் குருவாயூரப்பனை வேண்டிக்கொண்டது நடந்தேறிவிட்டது” என கூறி மகிழ்ந்திருக்கிறார். அப்போதுதான் தனது தாய் இவ்வாறு வேண்டிக்கொண்ட விஷயம் மனோரமாவிற்கு தெரிந்திருக்கிறது.  “அடுத்த முறை குருவாயூருக்கு போகும்போது நிச்சயமாக விளக்கு ஏற்றிவைக்க வேண்டும்” என்று கூறினாராம் அவரது தாயார்.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் குடி போதையில் கலாட்டா செய்த ரஜினி!.. ஷாக்கிங் பிளாஷ்பேக்

Arun Prasad
Published by
Arun Prasad