Dhanush: தனுஷுடன் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட்!... சீரியல் நடிகை பகீர் புகார்...
சினிமா துறையில் புதிதாக வாய்ப்பு தேடி வரும் பெண்களை அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பல வருடங்களாக இருக்கிறது. வெகு சில பெண்கள் மட்டுமே இதை வெளியே சொல்லுகிறார்கள். பல பெண்களும் இதை வெளியே சொல்லுவதில்லை. அதற்குக் காரணம் வெளியே சொன்னால் சினிமாவில் யாருமே வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்கிய நடிகைகளும் இங்கே இருக்கிறார்கள். ஆனால் அதற்காக எல்லோரையும் நாம் அப்படி சொல்லிவிடவும் முடியாது. அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டதால் சினிமாவே வேண்டாம் என போன பெண்களும் நிறைய இருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு Me too என்கிற ஹேஷ்டேக்கில் பாடகி சின்மயி சினிமா துறையில் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். அவரை தொடர்ந்து பல பெண்களும் தங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார்கள். ஒரு கட்டத்தில் அதில் நின்று போனது. அதன்பின் மார்க்கெட் போன சில நடிகைகள் அங்கும், இங்கும், எப்போதாவது பேட்டி கொடுக்கும்போது ‘என்னிடமும் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்கள்’ என சொல்வதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில்தான் பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனுஷ் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கமிட்மெண்ட் என்கிற பேரில் நான் தனுஷுடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என அவரின் மேனேஜர் ஸ்ரேயாஸ் எனக்கு அழுத்தம் கொடுத்தார். நான் முடியாது என சொன்னேன். அதற்கு ஸ்ரேயாஸ் ‘தனுஷ் சார் கூட பண்ண மாட்டீங்களா?’ என கேட்டார். யாராக இருந்தாலும் முடியாது என சொல்லிவிட்டேன்’ என ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.

நடிகைகள் தொடர்பாக ஏற்கனவே தனுஷ் மீது கெட்ட பெயர் இருக்கிறது. ஆனாலும் எங்கேயும் எப்போதும் அவர் எந்த விளக்கமும் கொடுப்பதில்லை. இந்நிலையில்தான் தனுஷ் மீதான மான்யா ஆனந்தன் குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறது. மான்யா ஆனந்த் வானத்தை போல உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
