இளையராஜா-மாரி செல்வராஜ் கூட்டணியில் மஞ்சணத்தி : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவிற்கு பிறகு கிராமிய பிண்ணனியில் படமெடுப்பதில் மாரி செல்வராஜுக்கு ஒரு தனி இடம் உண்டு. பரியேறும் பெருமாள் படத்தில் அறிமுகம் ஆன அவர் தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை மற்றும் பைசன் என கிராமங்களை சார்ந்த கதைகலை எடுத்து அதில் பெரிய வெற்றியையும் பெற்று வருகிறார்.
பைசன் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படைப்பான மஞ்சணத்தி படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியானது. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்தத் திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமிய படங்கள் என்றால் இளையராஜா புகுந்து விளையாடுவார். இதில் மாரி செல்வராஜுடன் கூட்டணி என்பதால் மிகப்பெரிய எத்ரிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மாரி செல்வராஜின் முந்தைய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன், நிவாஸ் கே.பிரசன்னா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த நிலையில், முதன்முறையாக இளையராஜாவுடன் அவர் கை கோர்த்துள்ளது இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பான மஞ்சணத்தி என்பது கிராமங்களில் காணப்படும் ஒரு வகை மரத்தின் பெயர் என்பதால் இது மண்ணின் மணத்தைப் பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை திவ்யா மாரி செல்வராஜ் தயாரிக்கிறார்.
