Categories: Cinema News latest news throwback stories

தவறிப்போன சிறுமியை கையை பிடித்து தூக்கிய எம்.ஜி.ஆர்… பின்னாளில் வேற லெவலுக்கு போன நடிகை… யார் தெரியுமா?


எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தவர் என்பதை பலரும் அறிவார்கள். அவரை பார்ப்பதற்கே கண் கோடி வேண்டும் என்பார்கள். எம்.ஜி.ஆர் ஒரு ஊருக்குள் பிரவேசித்தால் அந்த ஊர் மக்கள் அவரை பார்க்க எந்தளவுக்கு முந்தியடிப்பார்கள் என்பதை அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த ரசிகர்களை கேட்டால் மிகவும் உற்சாகத்தோடு கூறுவார்கள். அந்தளவுக்கு எம்.ஜி.ஆர் மக்களின் மனதில் நீங்கா நாயகனாக திகழ்ந்தார். இந்த நிலையில் ஒரு முறை மதுரையில் கூட்டத்தில் தவறிப்போன சிறுமியை எம்.ஜி.ஆர் கைக்கொடுத்து தூக்க பின்னாளில் அந்த சிறுமி மிகப்பெரிய நடிகை ஆனார். அந்த நடிகை யார்? அது என்ன சம்பவம்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.


1958 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் “நாடோடி மன்னன்”. இத்திரைப்படத்தை எம்.ஜி.ஆரே இயக்கியிருந்தார். எம்.ஜி.ஆர் இயக்கிய முதல் திரைப்படம் இதுதான். இத்திரைப்படம் மாபெறும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு மதுரையில் ஒரு திரையரங்கில் நடந்த ஒரு வெற்றிவிழாவில் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டார். அதன் பின் இரவில் எம்.ஜி.ஆர் மதுரையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.


அந்த சமயத்தில் மதுரையைச் சேர்ந்த ஒரு சிறுமியை அவரது பெற்றோர் வீட்டில் தூங்கவைத்துவிட்டு எம்.ஜி.ஆரை பார்க்க புறப்பட்டுவிட்டார்கள். அந்த சிறுமிக்கு எம்.ஜி.ஆரை பார்க்கவேண்டும் என்று ஆசை. ஆதலால் அந்த சிறுமி, தனது பெற்றோர் வீட்டை விட்டு கிளம்பிய சில மணி நேரங்கள் பிறகு தனது தம்பியை அழைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர் கலந்துகொண்ட ஹோட்டலுக்கு சென்றார். அங்கே அலைகடல் என கூட்டம் இருந்தது.


அந்த கூட்டத்தில் அந்த சிறுமி, தனது தம்பியை விட்டுவிட்டு கூட்டத்திற்குள் தொலைந்துபோய்விட்டார். அப்போது எம்.ஜி.ஆர் தனியாக அலைந்துகொண்டிருந்த அந்த சிறுமியை கைகொடுத்து மேடையில் தூக்கி நிறுத்தி, “இந்த சிறுமி தொலைந்துவிட்டதாக தெரிகிறது. இவளது பெற்றோர் இங்கே இருந்தால் வந்து சிறுமியை பெற்றுக்கொள்ளவும்” என கூறியிருக்கிறார்.


அந்த சிறுமி பின்னாளில் மிக சிறந்த குணச்சித்திர நடிகையாக வலம் வந்தார். அந்த நடிகையின் பெயர் சத்யா. “பசி” என்ற திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமான நடிகையாக அறியப்பட்டதால் அவர் “பசி” சத்யா என்று அழைக்கப்படுகிறார். பாலு மகேந்திரா இயக்கிய “வீடு” திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகப் பிரபலமாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Arun Prasad
Published by
Arun Prasad