தற்கொலைக்கு முயன்ற எம்.ஜி.ஆரை காப்பாற்றியது அவர்தான்!.. இவ்வளவு சோகமா?!…

0
115

பொதுவாக நடிகர்களை திரையில் பார்த்து மக்கள் ரசிப்பார்கள். அவருக்கென்ன இவ்வளவு ரசிகர்கள், பணம், பேர், புகழ் என எல்லாம் இருக்கிறது. ‘மகிழ்ச்சிக்கு என்ன குறைச்சல்?’ என்று நினைப்பார்கள். ஆனால், அந்த நடிகர் கடந்து வந்த பாதை யாருக்கும் தெரியாது. பல அவமானங்களை, சோகத்தை, கண்ணீரை அவர் தாண்டி இருப்பார்.

சினிமாவில் வாய்ப்பு என்பது வாரிசு நடிகர்களுக்கு மட்டுமே சுலபமாக கிடைக்கும். மற்றவர்கள் போரட வேண்டும். எம்.ஜி.ஆர் 30 வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு, அதன்பின் 10 வருடங்கள் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு பின்னர்தான் ஹீரோவாக மாறினார். பல அவமானங்களை தாண்டித்தான் அவர் சாதித்து காட்டினார்.

சொந்த வாழ்வில் அவர் சந்தித்த சோகங்கள் பல. சிறு வயதிலேயே அப்பாவை இழந்தார். இதனால், அவரின் அம்மா இலங்கையிலிருந்து கும்பகோணம் வந்தார். ஆனால், வறுமை. சாப்பாட்டுக்கு கூட வழியில்லை. உறவினர் வீட்டில் பத்து, பாத்திரம் தேய்த்தார். நாடகங்களில் நடிக்கப்போனால் தனது இரு மகன்களுக்கு உணவுக்கும், உடைக்கும் பிரச்சனை இல்லை என நினைக்கும் முடிவுக்கு அவர் தள்ளப்பட்டார்.

இதனால் 7 வயது முதலே அம்மாவை பிரிந்து சென்றார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நாடகங்களில் நடித்து கொண்டிருந்தபோது தங்கமணி என்பவருடன் அவருக்கு திருமணம் நடந்தது. ஆனால், சில மாதங்களிலேயே உடல்நலக்குறைவால் தங்கமணி மரணமடைந்தார். அவரின் இழப்பை எம்.ஜி.ஆரால் தாங்கி கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார்.

பொத்தனூரில் இருந்த தனது அண்ணன் சக்கரபாணியை பார்த்துவிட்டு ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வது என முடிவெடுத்தார். மாலை வரை வீட்டில் இருந்த எம்.ஜி.ஆர் இரவு அருகில் இருந்த ரயில் நிலையம் நோக்கி நடந்தார். ரயில் வந்து கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் தயார் ஆனார். அப்போது அவரின் தோள்மீது அவரின் ஒரு கை விழுந்தது.

பின்னால் சக்கரபாணி நின்று கொண்டிருந்தார். ‘நான் நினைத்தது போலவே நடந்துவிட்டது. தற்கொலை தீர்வல்ல’ என அறிவுரைகளை சொல்லி எம்.ஜி.ஆரை வீட்டுக்கு அழைத்துப்போனார். எம்.ஜி.ஆரின் அருகிலேயே படுத்துக்கொண்டார். அதிகாலை எழுந்து தற்கொலை செய்யலாம் என திட்டம் போட்டார் எம்.ஜி.ஆர். ஆனால், அவர் எழுந்தால் ‘என்னடா’ என அதட்டினார் சக்கரபாணி. 2, 3 முறை முயன்றும் எம்.ஜி.ஆரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இது கேள்விப்பட்டு எம்.ஜி.ஆரை சென்னை வர சொன்னார் கலைவாணர். சில சினிமா கம்பெனிகளிடம் சொல்லி எம்.ஜி.ஆருக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதன்பின் எம்.ஜி.ஆரின் மனம் மாறியது. சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் எம்.ஜி.ஆர் கிடைத்தார்.

google news