எல்லாமே பழைய ஐடியா.. ஐ பேக் நிறுவனம் நமக்கு தேவையா?.. அதிருப்தியில் திமுக

2021 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திட்டமிட்ட திமுக பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. கோடிக்கணக்கான தொண்டர்கள், லட்சக்கணக்கான கிளை கழகங்கள் மற்றும் நிர்வாகிகளை கொண்ட ஒரு கட்சி வெற்றிக்காக ஒரு தனியார் நிறுவனத்தை நாடியது திமுக நிர்வாகிகளுக்கே பிடிக்கவில்லை. ஆனால், திமுக தலைமை அவர்களை சமாதனம் செய்து ஐ-பேக் நிறுவனத்துடன் பணிபுரிந்து வந்தனர்.
ஆனால், திமுக எதிர்பார்த்தது போல் ஐ-பேக் நிறுவனம் எந்த புதிய ஐடியாக்களையும் கூறவில்லையாம். மாறாக பிரச்சாரம் செய்வது, மக்களை பார்த்து கையசைப்பது போன்ற வழக்கமான செயல்களையே செய்யுமாறு கூறி வருகிறதாம். இது திமுகவின் மாவட்ட செயலாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். ஐபேக் நிறுவனம் தரும் ஐடியாக்களை விட திமுக சிறப்பாக செயல்பட முடியும் எனக்கருதும் மாவட்ட செயலாளர்கள் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் பழனிச்சாமி கடந்த சனிக்கிழமை தனது பிரச்சாரத்தை சேலத்தில் துவங்கினார். மேலும், பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இதைக்கண்டு அதிர்ந்து போன திமுக தனது பிரச்சாரத்தை முன் கூட்டியே துவங்கியுள்ளது.
எனவே, புது வியூகத்தை வகுத்து கொடுக்கும் படி பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திடம் ஐடியா கேட்க, 2019ம் ஆண்டு திமுக பயன்படுத்திய அதே யுக்தியை பயன்படுத்த சொல்லியுள்ளதாம். அதாவது, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கிராம சபை கூட்டங்கள் மற்றும் குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது. எனவே, அதையே 2021 சட்டமன்ற தேர்தலுக்கும் பயன்படுத்த உள்ளார்களாம்.
மேலும், ஐ-பேக் நிறுவனம் தரும் ஐடியாக்கள் பொதுமக்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதற்கு ஸ்டாலின் முன்பு துவங்கிய ‘நமக்கு நாமே’ திட்டமே மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது என திமுக நிர்வாகிகள் உள்ளுக்குள் பொங்கி வருகின்றனராம்.
கடந்த 20ம் தேதி அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற போது திமுக தொண்டர்கள் வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால், ஐ-பேக் நிறுவன ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து உள்ளே சென்றது திமுக நிர்வாகிகளுக்கே பிடிக்கவில்லையாம். தற்போது அதை திமுக தலைமையும் புரிந்து கொண்டாலும், ஒப்பந்தப்படி செயல்பட வேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் ஐ-பேக் நிறுவனத்துடன் தொடர்ந்து பயணிக்க வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.