மொத ராத்திரி திரை விமர்சனம்!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள மொத ராத்திரி படத்தில் ஹீரோவாக பல படங்களில் துணை நடிகராக நடித்த ரிஷிகாந்த் நடித்துள்ளார். ஹீரோயினாக சிறை, யூத் படங்களில் நடித்த அனிஷ்மா அனில்குமார் நடித்துள்ளார். மேலும், பக்ஸ், சேத்தன், அப்துல் லீ என ஏகப்பட்ட நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் விருப்பமே இல்லாமல் திருமணம் பெற்றோர்களின் நெருக்கடி காரணமாக நடைபெற, மொத ராத்திரி என்ன ஆனது என்பது தான் மொத ராத்திரி படத்தின் கதை.
ஏற்கனவே உயிருக்கு உயிராக காதலித்த காதலி சாதி பிரச்னை காரணமாக கிணற்றில் விழுந்து இறந்து போக, அவரது நினைவை மறக்க முடியாமல் துபாய்க்கு சென்று குடும்பத்துக்கு பணத்தை அனுப்பிக் கொண்டிருக்கும் ஹீரோ மருதுவுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் முயற்சி செய்கின்றனர்.
காசு இல்லாத பையனுடன் காதல் செய்வதை ஹீரோயினின் அம்மா, துபாய் மாப்பிள்ளை தலையில் மகளை கட்டி வைக்க நினைக்கிறார். திருமணத்துக்கு முன்பே காதலனுடன் ஓடி விடலாம் என கனவு காணும் மணமகளின் கனவை அவரது காதலன் தூங்கி கெடுத்து விடுகிறான்.
பின்னர், மொத ராத்திரிக்கு முன்னதாக வந்து உன்னைக் கூட்டிட்டு போறேன், இந்த உலகத்திலேயே என்னை விட உன்னை யாரும் காதலிக்க முடியாது என சீன் போடும் அந்த ஒன்றுக்கும் உதவாதா காதலன் கதாபாத்திரத்தில் படத்தின் இயக்குநரே நடித்துள்ளார்.
அவரை காட்டும் காட்சியெல்லாம் ஏதோ ஷார்ட் ஃபிலிம் பார்க்கும் உணர்வையே கொடுக்கிறது. முதல் பாதியில் இருந்த பதற்றமோ, விறுவிறுப்போ 2வது பாதியில் சுத்தமாக இல்லாமல் அடி வாங்கி விடுகிறது. திருமண வீட்டில் நடக்கும் கல்யாண கலாட்டா, சண்டை, மொத ராத்திரியில் ரூமுக்குள் பொண்ணையும் மாப்பிள்ளையும் அனுப்பிவிட்டு வெளியே கலாய்க்கும் பெண்கள், காதலனுடன் அனுப்பி வைக்க நினைக்கும் மாப்பிள்ளைக்கு இடைவேளையில் காத்திருக்கும் ட்விஸ்ட் என கலகலப்பாக படம் ஓடி முடிகிறது.
மொத ராத்திரி - கடைசி வரை நடக்கல!
ரேட்டிங் - 3/5