ஸ்வாசிகா, சானியா ஐயப்பனுடன் குத்தாட்டம் போட்ட மோகன்லால்... வைரலாகும் வீடியோ!
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், தனது நடிப்பால் மட்டுமல்லாமல் மேடை நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். தற்போது ஜெர்மனியின் ஓபர்ஹவுசன் நகரில் நடைபெற்ற 'தி கம்ப்ளீட் ஆக்டர் மோகன்லால் லைவ்'கலை நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய உற்சாகமான நடன நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மலையாள நடிகைகள் ஸ்வாசிகா மற்றும் சானியா ஐயப்பன் ஆகியோருடன் இணைந்து மோகன்லால் மேடையேறினார். மூவரும் இணைந்து 'ஆவேசம்' திரைப்படத்தில் இடம்பெற்ற ரசிகர்களின் பிரபலமான 'இலூமினாடி' பாடலுக்கு எனர்ஜி நிறைந்த நடனமாடி பார்வையாளர்களின் கைதட்டலை அள்ளினர்.

அதுமட்டுமின்றி, 'பாகுபலி' திரைப்படத்தின் சூப்பர் ஹிட் 'மனோகரி' பாடல் உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களுக்கும் மோகன்லால் உற்சாகமாக நடனமாடினார். 66 வயதிலும் இளம் நடிகர்களுக்கு இணையாக அவர் வெளிப்படுத்திய சுறுசுறுப்பு, முகபாவனைகள் மற்றும் நடன அசைவுகள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நடன நிகழ்ச்சியுடன் மட்டுமல்லாமல், இந்த கலை நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகி கே.எஸ். சித்ராவுடன் இணைந்து மோகன்லால் பாடல்களையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். அவரது பன்முகத் திறமைக்கு அரங்கமே எழுந்து நின்று கைதட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. "லாலேட்டனின் எனர்ஜிக்கு ஈடு இல்லை", "வயது என்பது வெறும் எண் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்" என்று ரசிகர்கள் பாராட்டி பதிவிட்டு அந்த வீடியோக்களை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
