ரூ.100 கோடி பட்ஜெட்.. 4 நாட்களில் வெறும் ரூ.16 கோடி!.. மூக்குத்தி அம்மன் 2 வசூலால் அதிர்ச்சி!

நயன்தாரா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2
 
mookuthi amman 2

நயன்தாரா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2 . பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இப்படம், வெளியான முதல் நான்கு நாட்களில் எதிர்பார்த்த அளவுக்கு வசூலைக் குவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியான மூக்குத்தி அம்மன்  திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக உருவான இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார். முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த நிலையில், நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான  மூக்குத்தி அம்மன் 2  திரைப்படம் முதல் நாளில் ரூ.1.88 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியானது. இரண்டாவது நாளான சனிக்கிழமை ரூ.2.45 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.4.60 கோடியும் வசூலித்துள்ளது. தொடர்ந்து விடுமுறை தினமான திங்கட்கிழமை ரூ.5.15 கோடியை ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, முதல் நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.14.08 கோடி வசூலித்துள்ளதாகவும், உலக அளவில் மொத்தம் ரூ.16.30 கோடி வசூலாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, ஒவ்வொரு நாளும் படத்தின் வசூல் அதிகரித்து வந்தாலும், அதன் பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது இந்த வசூல் குறைவாகவே பார்க்கப்படுகிறது.
  மூக்குத்தி அம்மன் 2  திரைப்படம் சுமார் ரூ.100 கோடி செலவில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், முதல் நான்கு நாட்களில் உலக அளவில் ரூ.16.30 கோடி மட்டுமே வசூலித்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை முதல் நான்கு நாட்களின் வசூலை மட்டும் வைத்து முடிவு செய்துவிட முடியாது.    வரும் நாட்களில் படத்தின் வசூல் எந்த அளவுக்கு அதிகரிக்கிறது என்பதைப் பொறுத்தே மூக்குத்தி அம்மன் 2  திரைப்படத்தின் வெற்றி குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியும்.

From Around the web