×

என் கேரக்டரையே...புரிஞ்சுக்க மாட்டேங்கறீய...! 
 

சத்யராஜ் நடித்த சூப்பர்ஹிட் படங்கள் 
 
sathyaraj

சத்யராஜ் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வில்லனாகவே நடித்து வந்தார். ரஜினி கமல் படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கமலுடன் நடித்த காக்கிச்சட்டை படத்தில் தகடு தகடு...என ஸ்டைலாக பேசும் வசனத்தைச் சொல்லலாம். அதேபோல் ரஜினியுடன் மிஸ்டர் பாரத் படத்தில் வில்லனாக நடித்து கலக்கியிருப்பார். இந்தப்படத்தில் தான் என்னம்மா கண்ணு சௌக்கியமா...ஆமம்மா கண்ணு சௌக்கியம் தான்...என்ற பாடல் பிரபலமாகி பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இந்தப்பாடலை ஹீரோ ரஜினிக்கு நிகராக வில்லன் சத்யராஜூக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பார்கள்.  

வில்லனாக நடித்தாலும் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டார். அவர் வளர்ந்து வந்த கால கட்டத்திதல் ஹீரோவானார். படத்தில் கதாநாயகனாக நடித்ததும் எந்த ஒரு நடிகரின் சாயலும் இல்லாமல் வெகு அழகாக நடித்து இருப்பார் சத்யராஜ். வில்லனிலிருந்து ஹீரோவாகி பிரபலமான ஒரே நடிகர் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லன் வேடத்திலும், ஹீரோ வேடத்திலும் தமிழ்திரையுலகில் சிறப்பாக நடித்து பெயர் பெற்றவரும் சத்யராஜ் மட்டும் என்றால் மிகையாகாது. அவர் நடித்த படங்களில் பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. பிற்காலத்தில் குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர் என  அனைத்து கெட்-அப் களிலும் தனித்துவம் பெற்று சிறந்து விளங்கியவர் தான் மகாநடிகன் சத்யராஜ். சத்யராஜ் கவுண்டமணி காமெடி என்றால் செம லூட்டியாகத்தான் இருக்கும். 
இவரை நூறாவது நாள் படத்தில் மணிவண்ணன் வில்லனாக நடிக்க வைத்தார். இப்படம்தான் இவரது சினிமா கேரியரில் மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது. அதன் பிறகு இவர் வில்லனாக நடித்த படம் தான் 24 மணி நேரம். இந்தப்படத்தில் தான் என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீய...ங்கற சூப்பர் பஞ்ச் டயலாக்கும் வரும். சத்யராஜின் இந்த டயலாக் இப்போது வரை டிரேடு மார்க்காகி விட்டது. சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த இவர் சாவி படத்தில் கதாநாயகனான நடித்தார். தொடர்ந்து பல படங்களில் வெவ்வேறு கேரக்டர்களில் நடித்து தனக்கென தனியிடத்தைப் பிடித்தார் சத்யராஜ். இதனால் தான் அவருக்கு ரசிகர்கள் புரட்சித்தமிழன் என்ற பட்டத்தைத் தந்தனர். குணச்சித்திர வேடத்தில் பாகுபலியில் தனி முத்திரை பதித்தார் சத்யராஜ்.

அவர் நடித்த படங்களில் முத்திரை பதித்த ஒரு சிலவற்றை இங்கு பதம் பார்ப்போம். 

மந்திரப்புன்னகை 

இது 1986ல் சத்யராஜ் மற்றும் நதியா நடித்த காதல் சித்திரம். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்;பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இடம்பெறும் மந்திரப்புன்னகையாம் மஞ்சள் நிலவாம் பெண்ணே...பெண்ணே...என்ற பாடல் மனதுக்குள் இன்றும் ரீங்காரமிடும் பாடலாக அமைந்துள்ளது.

கடலோரக்கவிதைகள்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் படைப்பில் உருவான கடலோரக்கவிதைகள் படத்தில் சத்யராஜ் டீச்சர் ரேகாவை காதலிப்பார். இந்தப்படத்தில் காதல் கசிந்துருக நடித்து ரசிகர்களின் நெஞ்சில் தனி இடத்தைப் பிடித்திருப்பார். இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமை. இப்படத்தில் நடிக்க முதலில் பாரதிராஜா இவரை கேட்டபோது மறுத்துள்ளார் சத்யராஜ். பின் அவரது வற்புறுத்தலால் தான் நடிக்க சம்மதித்தாராம். இப்படத்தில் இசைஞானியின் இசையில் அடி ஆத்தாடீ....இளமனசொண்ணு றெக்க கட்டி பறக்குது சரிதானா..., கொடியிலே...மல்லிகைப்பூ...,போகுதே...போகுதே...என் பைங்கிளி போகுதே...பாடல்கள் இன்றும் நம் மனதை லேசாக மாற்றும் சக்தி வாய்ந்தது. 

நடிகன்

பி.வாசு இயக்கத்தில் 1990ல் வெளியான படம் நடிகன். படத்தின் பெயருக்கேற்ப ஒவ்வொரு காட்சியிலும் நடிகனாக நடித்து வெளுத்து வாங்கியிருப்பார். குஷ்பூ, கவுண்டமணி, மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு ஆகியோரும் நடித்திருப்பார்கள். கலகலப்புக்கு பஞ்சமில்லாத படம் என்ற முத்திரையைப் பெற்றது நடிகன். 

மக்கள் என் பக்கம் 

இது 1987ல் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளியான படம் இது. இந்தப்படத்தில் சத்யராஜ், அம்பிகா, ராஜேஷ், நாகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்;. இத்திரைப்படம் மலையாளத்தில் வெளியான ராஜாவின்டே மகன் என்ற படத்தை தழுவியது. இத்திரைப்படம் அரசியல் கருத்தை மையமாகக் கொண்ட திரைப்படமாகும். வணிகரீதியாக வெற்றி பெற்று 100 நாள்கள் ஓடிய படம் இது. 

வேதம் புதிது 

இது 1987ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் வேதம் புதிது. சத்யராஜ், அமலா, ராஜா, ஆர்யா நடித்த திரைப்படம். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் சத்யராஜின் நடிப்பை பெரிதும் பேச வைத்த படம். காரணம் படத்தில் ஒரு சிறுவன் ஒரு காட்சியில் சத்யராஜிடம் நான் கரை ஏறி விட்டேன. நீங்கள் எப்போது ஏற போகிறீர்கள் என்று கேட்பான். அப்போது சத்யராஜ் அவருடைய நடிப்பு திறமையை மிகவும் அழகாக வெளிப்படுத்தி இருப்பார். படத்தில் பாலு தேவராகவே மாறியிருப்பார் சத்யராஜ். இந்தப்படத்திற்காக  அவர் பிலிம்பேர் விருது பெற்றார். சிறந்த தேசிய விருது பெற்ற படம் இது. கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா பாடல் இப்படத்தில் தான் இடம்பெற்றது.

அமைதிப்படை 

சத்யராஜ் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம்;. இன்றைய அரசியல் சூழ்நிலையை அன்றே படத்தில் காட்டி இருப்பது மட்டுமின்றி மிரட்டியிருப்பார். சத்யராஜ், மணிவண்ணனின் அரசியல் காமெடி மிக அற்புதமாக அமைந்தது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு வழிவகுத்தது. இதில் மணிவண்ணனைப் பார்த்து மணியா...என்று பேசும் டயலாக் செம காமெடி ரகம். அரசியல் நய்யாண்டி நாகராஜசோழனாகவே மாறியிருப்பார். இதன் 2ம் பாகமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. 


பூவிழிவாசலிலே

1987-ல் பாசில் இயக்கத்தில் வெளியான படம். சத்யராஜ், சுஜிதா, ரகுவரன், நிழல்கள் ரவி, பாபு ஆண்டனி ஆகியோர் நடித்திருந்தனர். பூவினு புதிய பூந்தென்னல் என்ற மலையாளபடத்தின் ரீமேக் இது. த்ரில்லர் படமாக இருக்கும். பல்வேறு தரப்பினரால் பாராட்டு பெற்ற படம் இது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் 100 நாள்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது. 
சின்ன சின்ன ரோஜாப்பூவே..., ஒரு கிளியின் தனிமையிலே...பாடல்கள் முத்தானவை.

தாய்நாடு
 
1989ல் அரவிந்தராஜ் இயக்கிய இத்திரைப்படம் தாய்நாடு. இதில் சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். உடன், ராதிகா, ஜனகராஜ், நாசர், எம்.என்.நம்பியார் நடித்திருப்பது கூடுதல் சிறப்பு. 

உடன்பிறப்பு

1993ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் உடன்பிறப்பு. உடன் ரகுமான், சுகன்யா, கஸ்தூரி, திலகன், நாசர் ஆகியோர் நடித்திருப்பார்கள். நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா...வார்த்தையில்லையே...என்ற அற்புதமான பாடல் இப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளது.


வால்டர் வெற்றிவேல் 

1993ல் சத்யராஜ் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் வால்டர் வெற்றிவேல். சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்து தனி முத்திரை பதித்தார். சுகன்யா, ரஞ்சிதா, நாசர், கவுண்டமணி ஆகியோர் உடன் நடித்திருப்பார்கள். இந்தப்படம் 200 நாள்களைக் கடந்து ஓடி மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது. தொடர்ந்து சிரஞ்சீவி நடிக்க எஸ்.பி.பரசுராம் என தெலுங்கிலும், கோவிந்தாவின் நடிப்பில் குத்தார் என இந்தியிலும் ரீமேக் ஆனது. சத்யராஜூக்கு போலீஸ் வேடம் டிப்-டாப் உடையுடன் கனகச்சிதமாக பொருந்தியது. மிடுக்கான தோற்றத்தில் அச்சு அசலான போலீஸ் அதிகாரியாகவே மாறியிருப்பார். இதுவே படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணமானது. 

From around the web

Trending Videos

Tamilnadu News