Categories: Cinema News latest news throwback stories

சிவாஜிக்கே கவுண்டர் கொடுத்து பேசிய நாகேஷ் ஒட்டுமொத்த யூனிட்டும் பயந்த நேரத்தில் நடந்தது என்ன?

தமிழ்சினிமாவில் வசன உச்சரிப்பு, முகபாவனை மற்றும் பாடிலாங்குவேஜ் மிக முக்கியம். படத்தில் நடிக்கும்போது இவை அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி ரசிகர்களுக்கு விருந்தாகப் படைப்பதில் வல்லவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரின் பூத உடல் அழிந்தாலும் இன்று வரை இவர் தனது திரைப்படங்களின் மூலம் அழியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தம் நடிப்பில் கரைகண்டது போல வேறு எந்த நடிகரும் இது வரை நடித்ததில்லை.

nagesh in server sundaram

அவருக்கு இணையாக நகைச்சுவையில் வெளுத்துக்கட்டும் நடிகர் யார் என்றால் அது நாகேஷ் மட்டும் தான். இருவரும் இணைந்து நடித்தப் படங்களைப் பார்த்தாலே தெரியும். அனைத்துமே ஒரிஜினலாக இருக்கும். இது நடிப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு அந்த கதாபாத்திரமாகவே மாறிப் போய் இருப்பார்கள். தாமரைக்குளம் என்ற படம் தான் நாகேஷ்க்கு முதல் படம். அது ஒரு சிறிய வேடம் தான். அடுத்து அவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை.

MGR, Nagesh

கே.பாலாஜியின் உதவியால் ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் பட வாய்ப்பு கிடைத்தது. பணத்தோட்டம், பெரிய இடத்துப் பெண், தெய்வத்தின் தெய்வம் படங்களில் நடித்துப் பெயர் பெற்றார். நான் வணங்கும் தெய்வம் படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவையான சம்பவம்.

மதிய உணவு இடைவெளியில் இயக்குனர் சோமு, சிவாஜி பேப்பர் படித்துக்கொண்டு இருந்தபோது நாகேஷை அழைத்துச் சென்று சிவாஜியிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். இவர் பெயர் நாகேஷ். நாடக நடிகர். இப்படத்தில் நடிப்பதற்காக வந்திருக்கிறார் என்று சொன்னார். அப்போது சிவாஜி நான் ஒரு புதுநடிகராச்சே…இவ்வளவு பெரிய நடிகரோடு எப்படி நடிக்கப்போகிறோம் என்று நினைச்சி நடிப்பைக் கோட்டை விட்டுடாதே என்று சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து வேறு எதுவும் பேசாமல் தன்னிடமிருந்த பேப்பரைப் படிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் நாகேஷ் அங்கிருந்து கிளம்பி விடுவார் என்று நினைத்துள்ளார் சிவாஜி. ஆனால் அதற்கு நேர்மாறாக நாகேஷ் கொஞ்சமும் பயப்படாமல் சிவாஜியின் வார்த்தைகளுக்கு கவுண்டர் கொடுத்து தனக்கே உரிய நகைச்சுவைப்பாணியில் பேசி கலாய்த்துள்ளார்.

Nagesh

அப்போது நான் புதுப்பையன் தானே என்று நினைத்து நீங்கள் உங்கள் நடிப்பைக் கோட்டை விட்டு விடாதீர்கள் என்று தைரியமாகச் சொல்லியுள்ளார் நாகேஷ். இதைக்கேட்ட மற்றவர்கள் சிவாஜி கோபத்தில் கொந்தளித்து விடுவார் என்று நினைத்துப் பயந்துள்ளனர்.

ஆனால், அவரோ பெருந்தன்மையுடன் சிரித்தபடி அங்கிருந்து போய்விட்டார். நடிகர் திலகத்துடன் இணைந்து நாகேஷ் பச்சை விளக்கு, நவராத்திரி, திருவிளையாடல், மோட்hர் சுந்தரம்பிள்ளை, சரஸ்வதி சபதம், இருமலர்கள், ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், தில்லானா மோகனாம்பாள் என நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.

இந்தப்படங்களில் இருவரும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். சிவாஜி நடித்த திருவிளையாடல் படத்தில்; இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தருமி காட்சிக்காக நாகேஷைத் தவிர வேறு எவரும் நடிக்க முடியாது என்று திடமாக நம்பியுள்ளார். அவர் நாகேஷிடம் கால்ஷீட் கேட்டு போன் செய்தார். அப்போது நாலைந்து படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்த நாகேஷ் இயக்குனர் மற்றும் சிவாஜிக்காக சம்மதித்துள்ளார்.

படத்தில் எவ்வித ஒத்திகையுமின்றி நாகேஷ் நடித்துள்ளார். எப்படி என்றால், நாகேஷ் மைலாப்பூர் கபாலீஸ்வரர் தெப்பக்குளத்தில் கிருஷ்ணசாமி ஐயர் தனக்குத்தானே புலம்புவதைப் பார்த்து இருக்கிறார். அதை அப்படியே மனதில் கொண்டு தருமி கதாபாத்திரத்திற்கு மெருகேற்றியுள்ளார். படத்தில் இந்தக்காட்சியை வெறும் ஒன்றரை நாளில் நடித்துக் கொடுத்துள்ளார் நாகேஷ்.

சில மாதங்கள் கழித்து படத்திற்கு டப்பிங் பேச சிவாஜி ஸ்டூடியோவிற்கு வந்துள்ளார். படத்தின் தருமி காட்சியைப் பார்த்த சிவாஜி என்ன சொல்லப்போகிறார் என்று படபடத்தார் நாகேஷ். அப்போது இயக்குனரை அழைத்த சிவாஜி நாகராஜா இதைத் திரும்பப் போடு பார்க்கலாம் என்றார்.

சிவாஜி அப்படி சொன்னதும், நாகேஷ் என்ன ஓவரா சீன் போட்டு இருக்கானே…ன்னு தான் நடித்தக் காட்சிகளைத் தூக்கி விடச் சொல்லிருவாரோ என பயந்துள்ளார். ஆனால், சிவாஜி நாகராஜா இந்த மாதிரி ஒரு நடிப்பை நான் பார்த்ததில்லை. நாகேஷின் நடிப்பு ரொம்ப பிரமாதம். ஒரு காட்சியைக் கூட தூக்கிடாதீங்க. படத்தில் அவன் பேசுற வசனத்திற்கும், சேஷ்டைகளுக்கும் தியேட்டரில் இந்தக்காட்சிக்கு ரசிகர்கள் கைதட்டல் பிரமாதமாகக் கிடைக்கும்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். அவன் பொறுப்பில்லாத பயல். டப்பிங் ஒழுங்காகப் பேச மாட்டான். டப்பிங் பேச வைங்க. ஒழுங்கா பேசலைன்னா வெளியில விடாதீங்க என்று இயக்குனரிடம் சொல்லிவிட்டுப் போனார் சிவாஜி. அவர் சென்றதும் தள்ளி நின்று கேட்டுக்கொண்டிருந்த நாகேஷ் எவ்வளவு பெரிய நடிகர் நம்மைப் பாராட்டி விட்டுப் போறாங்கன்னு சந்தோஷத்தில் நெகிழ்ந்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v