nagesh
தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் நகைச்சுவை நடிகராக நடிக்க துவங்கி பின்னர் கதாநாயகன் மற்றும் குணச்சித்திர நடிகராக பல திரைப்படங்களில் கலக்கியவர் நாகேஷ். அரசு வேலையை விட்டுவிட்டு நாடகங்களில் நடிக்க துவங்கி பல அவமானங்களை சந்தித்து சினிமாவில் நுழைந்தார் நாகேஷ்.
ஆனால், ஒரு கட்டத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறினார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன் என யார் ஹீரோ என்றாலும் சரி. அவர்களின் படங்களில் நாகேஷ்தான் காமெடி செய்தார். ஒரே நாளில் பல படங்களில் நடித்தவர் நாகேஷ். பல திரைப்படங்களின் வெற்றிக்கு நாகேஷே காரணமாக இருந்தார். சிவாஜி நடிப்பில் வெளிவந்த திருவிளையாடல் படத்தில் கூட தருமியாக சில நிமிடங்களே வந்து அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் இருந்தார். அப்படி பல படங்களை சொல்லலாம்.
நாகேஷின் காமெடியால் பல படங்கள் ஓடினாலும் பெயர் என்னவோ ஹீரோவுக்குதான் போகும். இது காலம் காலமாக சினிமாவில் நடப்பதுதான். ஒருமுறை ஒரு ரேடியோ ஒன்றுக்கு நாகேஷ் பேட்டி கொடுத்த போது அவரிடம் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன நாகேஷ் ‘அதற்கு நான் கவலையே படமாட்டேன். ஒரு கட்டிடம் கட்டும்போது சவுக்கு மரத்த வச்சி சாரம் கட்டி பலகையெல்லாம் போட்டு கட்டிடத்தை கட்டுவாங்க. கட்டிடம் கட்டின பின்னாடி சவுக்கு மரத்தை அவுத்து யார் கண்ணிலும் படாதவாறு கட்டிடத்தோட பின்னாடி போட்ருவாங்க. அதோட, கொஞ்சமும் சம்பந்தம் இல்லாம எங்கிருந்தோ ஒரு வாழ மரத்தை எடுத்துவந்து கட்டிடத்தோட முன்னாடி கட்டி எல்லோரையும் வரவேற்பாங்க. ஆனா அந்த வாழ மரத்தோட ஆயுள் ஒருநாள்தான். அடுத்த நாள் அது குப்பைக்கு போயிடும். ஆனால், சவுக்கு மரம் அப்படி இல்லை. அடுத்த கட்டிடம் கட்டுறதுக்கு ரெடி ஆகிடும். நான் வாழமரம் இல்லை. சவுக்கு மரம்’ என பஞ்ச் அடித்தாராம்.
Soori: கோலிவுட்டில்…
Vijay: நடிகர்…
Vijay Devarakonda:…
Kantara Chapter…
STR49 :…