லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரிஸ் திருட்டு கதையா? சிக்கிய வெங்கட் பிரபு...

கோலிவுட்டில் நாளுக்கு நாள் கதை திருட்டு பஞ்சாயத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல முன்னணி இயக்குனர்கள் மீது அவர்கள் உதவி இயக்குனர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்தவண்ணம் இருக்கிறார்கள். இப்பட்டியலில் புதிதாக இணைந்து இருப்பவர் இயக்குனர் வெங்கட் பிரபு.
காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவர இருக்கும் முதல் வெப் சீரிஸ் லைவ் டெலிகாஸ்ட். வெங்கட்பிரபு சீரிஸை இயக்கி இருக்கிறார். விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சசிதரன் இச்சீரிஸ் என்னுடைய கதை எனக் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், லைவ் டெலிகாஸ்ட் கதை என்னுடையது. நான் தான் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சரணிடம் சொல்லி இருந்தேன். ஆனால் அப்போது இது பெரிய பட்ஜெட்டாக இருக்கும் என்றனர். இதனால், அக்கதையை தள்ளி வைத்து விட்டு வேறு கதையை என்னிடமே கேட்டனர். நான் தான் தெருவோர கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு சென்னை 600028 கதையை சொன்னேன். அப்படத்தின் ஜெய் கதாபாத்திரம் என்னுடைய நிஜ வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. மொத்த கதையையும் வாங்கி பின்னர் சரணும், வெங்கட் பிரபுவும் என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டனர். நானும் அவர்களிடம் இருந்து விலகி விட்டேன்.
சமீபத்தில், என்னுடைய வீட்டில் தீ விபத்தி ஏற்பட்டது. இதை தெரிந்து கொண்ட வெங்கட்பிரபு எனக்கு தொடர்பு கொண்டார். அப்போது பேசிக்கொண்டே உன்னுடைய கதைகள் எல்லாம் என்ன ஆகியது எனக் கேட்டார். நானும் அது தீயில் எறிந்து விட்டது எனச் சொல்லி விட்டேன். அந்த தைரியத்தில் தற்போது என்னுடைய கதையை சீரிஸாக இயக்கி இருக்கிறார். நான் வைத்த ஒரிஜினல் கதைக்கு நேரடி ஒளிபரப்பு எனப் பெயரிட்டேன். கதையை திருடியது இல்லாமல் படத்திற்கும் மொழி பெயர்ப்பு மட்டுமே செய்து பெயர் வைத்து இருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். சசிதரனின் இப்புகாரால் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டு இருக்கிறது.
சசிதரன் இக்கதை திருட்டு குறித்து எழுத்தாளர் சங்கத்தில் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்திருக்கிறார். சசிதரன் 'அட்டகத்தி' தினேஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் 'வாராயோ வெண்ணிலாவே' என்கிற படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.