வாட்ஸ் அப்பில் புது மாற்றம்... இந்த அப்டேட்டைக் கவனிச்சீங்களா?

வாட்ஸ் அப், தனது பிரைவசி பாலிசியில் புதிய அப்டேட் கொடுத்திருக்கிறது. பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப்பில் பயனாளர்களின் தகவல்களைப் பயன்படுத்தும் விதம் குறித்து அவ்வப்போது சர்ச்சை எழுவதுண்டு.
இந்தநிலையில், பயனாளர்களின் தகவல்களைப் பயன்படுத்துவது குறித்த தனது பிரைவசி பாலிசியை அப்டேட் செய்திருக்கிறது வாட்ஸ் அப். இந்தப் புதிய விதிகள் வரும் பிப்ரவரி 8, 2021 முதல் அமலாக இருக்கிறது.
வாட்ஸ் அப் புதிய பிரைவசி பாலிசி -முக்கிய அம்சங்கள்
* வாட்ஸ் அப் சேவை மற்றும் பயனாளர்களின் தகவல்களை அந்த நிறுவனம் எப்படிப் பயன்படுத்துகிறது என்பது குறித்த அப்டேட்.
* பேஸ்புக் உதவியோடு தொழில் நிறுவனங்கள் வாட்ஸ் அப் சாட்களின் தகவல்களைப் பயன்படுத்துவது.
* பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து வாட்ஸ் அப் செயல்படும் விதம் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் மற்ற தயாரிப்பு நிறுவனத் தளங்களில் வாட்ஸ் அப் பயனாளர்களின் தகவல்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்த அப்டேட்.
என்ன பாதிப்பு ஏற்படும்?
வாட்ஸ் அப்பின் இந்த புதிய பிரைவசி விதிகளை முழுமையாகப் படித்து, அதன்பிறகு உங்கள் சம்மதத்தைக் கொடுங்கள். ஒருமுறை நீங்கள் சம்மதம் தெரிவித்துவிட்டால், வாட்ஸ் அப் பேமெண்ட், ஜியோ மார்ட் உடனான பேஸ்புக்கின் தொழில் புரிந்துணர்வு போன்றவற்றில் உங்கள் தகவல்களை வாட்ஸ் அப் பயன்படுத்தலாம். அதற்காகவே பிரைவசி விதிகளில் இந்த மாற்றங்களை வாட்ஸ் அப் கொண்டுவந்திருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். அதேபோல், எதிர்காலத்தில் வாட்ஸ் அப் கொடுக்கும் அப்டேட்டுகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து நம்மால் அதன் சேவைகளைப் பயன்படுத்த முடியும். வாட்ஸ் அப்பால் இதுவரை பெரிய அளவில் வருமானம் பார்க்காத பேஸ்புக், வருமான வாய்ப்புகளுக்காகவே இந்த முயற்சியை எடுத்திருப்பதாகவும் டெக் வல்லுநர்கள் பார்க்கிறார்கள்.