சில காரணங்களால் சினிமாவை விட்டே விலக நினைத்தேன்!.. நிவேதா பெத்துராஜ் மனம் திறந்து பேசிட்டாரே!..

 
nivetha

நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் நடைபெற்ற 'சிங்கீதம்' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையின் கடினமான கட்டங்களை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசியுள்ளார். அவரது பேச்சு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், 94 வயதிலும் படைப்பாற்றலுடன் செயல்பட்டு வரும் மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியுள்ள இந்த படம், வசனங்களே இல்லாமல் முழுக்க முழுக்க பாடல்கள் மூலமாக கதாபாத்திரங்கள் உரையாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மியூசிக்கல் ஃபேண்டஸி திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தில் புதுமுகங்களான அயன், அஹல்யா பம்ரு, ஷாலினி கொண்டேபுடி மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கவனம் பெற்ற இயக்குநரும் தயாரிப்பாளருமான நாக் அஷ்வின் இந்த படத்தை தயாரித்துள்ளார். மேலும், 'சிங் கீதம்' திரைப்படம் சிங்கீதம் சீனிவாச ராவின் சுமார் 40 ஆண்டுகால கனவுத் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேடையில் பேசிய நிவேதா பெத்துராஜ், "2023-ஆம் ஆண்டு நான் சினிமாவை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். வாழ்க்கை என்னை தவறான பாதைக்கும், தவறான முடிவுகளுக்கும் அழைத்துச் சென்றது. அப்போது சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் காரு என்னை இந்த கோல்டன் ப்ளாக்பஸ்டர் படத்தில் சேர்த்தார். நாக் அஷ்வினுக்கு நான் மிகவும் நன்றி சொல்ல வேண்டும். அவர் இல்லையென்றால் நான் இன்று இங்கே இருந்திருக்க மாட்டேன். ஒருவேளை இமயமலைக்கு சென்று தியான வாழ்க்கையைத் தேர்வு செய்திருப்பேன். தற்போது ஒரு நல்ல படத்தின் மூலம் மீண்டும் திரும்பி வந்துள்ளேன்" என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

நிவேதா பெத்துராஜின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது திரை உலகப் பயணத்தின் புதிய அத்தியாயமாக 'சிங் கீதம்' திரைப்படம் பார்க்கப்படுகிறது.

மேலும், சென்னையில் நடைபெற்ற படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு, சிங்கீதம் சீனிவாச ராவின் விடாமுயற்சியையும், 40 ஆண்டுகளாக தனது கனவை உயிரோடு வைத்திருந்த அர்ப்பணிப்பையும் பாராட்டினர்.

Tags

From Around the web