திருநங்கையாக ஆண் நடிப்பது அயோக்கியத்தனம்... சர்ச்சை கிளப்பும் பெண் இயக்குனர்...

ஆவணப்பட இயக்குநரும், எழுத்தாளருமான திவ்யபாரதி “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தை இயக்கி இருந்தாா். இந்த ஆவணப்படம் தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஒக்கி புயல் பாதிப்புகளை பதிவு செய்யும் வகையில், “ஒருத்தரும் வரேல” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளாா். முக்கியமாக கருத்துக்களை முன் வைப்பதில் திவ்யபாரதி பலருக்கு முன் மாதிரியாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு திருநங்கையாக ஆண்களை நடிக்க வைப்பது அயோக்கியத்தனம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இதுகுறித்து, அவர் பேசுகையில், திருநங்கைகளின் வாழ்க்கையை உயர்த்துகிறோம் என அக்கதாபாத்திரத்தில் ஒரு ஆணை நடிக்க வைக்கிறார்கள். அது அயோக்கியத்தனம். என்னுடையை அடுத்த படத்தில் திருநங்கைகளையே நடிக்க வைத்திருக்கிறேன். நிஜத்தில் அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதை அப்படியே படத்தில் பிரதிபலித்திருக்கின்றனர்.
திருநங்கை என்பது ஒரு புரொஃபஷன் கிடையாது. அதுவொரு பாலினம். அதில் எப்படி இன்னொருவரை நடிக்க முடியும்? விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய கேரக்டரில் ஒரு பெண்ணையோ, நயன்தாரா நடிக்க வேண்டிய கேரக்டரில் ஓர் ஆணையோ நடிக்க வைத்துவிடுவார்களா? ஆண் இடத்தில் பெண்ணையும் பெண் இடத்தில் ஆணையும் நடிக்க வைக்க முடியாதபோது திருநங்கைகளின் இடத்தில் மட்டும் எப்படி ஓர் ஆணை நடிக்க வைக்கின்றனர்? என்றார். இது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தமுறை ஆவணப்படம் மட்டுமல்லாது திருநங்கைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து முழுநீள திரைப்படத்தையும் திவ்யபாரதி இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.