
Cinema News
Vijay TVK: ‘பேர் சொல்லும் குடும்பம்’ கலைஞர் துதி பாடிய விஜயை நியாபகம் இருக்கா? ஆனா இப்போ?
Vijay TVK: நேற்று முன்தினம் மதுரையில் பெரிய அளவில் கூட்டத்தை கூடி பிரம்மாண்டமாக மாநாட்டையும் நடத்தி முடித்துள்ளார் நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய். இதற்கு முன்னதாக விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தி அரசியலுக்குள் ஒரு பீதியை கிளப்பினார். ஆனால் நடிகராக அதுவும் மார்கெட் உள்ள நடிகராக இருக்கும் பட்சத்தில் அவரை பார்க்க சாதாரணமாக மக்கள் கூடத்தான் செய்வார்கள். அப்படி கூடிய கூட்டம் தான் அது என பல அரசியல் தலைவர்கள் அதை விமர்சித்தனர்.
ஆனாலும் மதுரையிலும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கூடினார்கள். விக்கிரவாண்டியில் பேசியதை விட மதுரையில் மிகவும் ஆக்ரோஷமாக பேசியிருந்தார் விஜய். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் விக்கிரவாண்டியில் பேசும் போது மற்றவர்களை பேசி பேசி அரசியல் செய்வது நம்முடைய வேலை இல்லை என்று விஜய் பேசியிருந்தார். ஆனால் மதுரையில் அதற்கு முற்றிலும் மாறான பேச்சாக விஜயின் பேச்சு அமைந்தது.
குறிப்பாக மாநிலத்தில் ஆளும் கட்சியையும் மத்தியில் ஆளும் கட்சியையும் தைரியமாகவே விமர்சித்திருந்தார் விஜய். அதுவும் அங்கிள் அங்கிள் என முதலமைச்சர் ஸ்டாலினை கிண்டலாக பேசியிருந்தார் விஜய். இது ஆளும் கட்சிக்கு மட்டுமில்லாமல் மற்ற கட்சிகளுக்கிடையிலும் சல சலப்பை ஏற்படுத்தியது. இப்படி விஜய் ஒரு முதலமைச்சரை பேசியிருக்க கூடாது என்றே பல பேர் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் நம்முடைய நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா? இது வேற வாய்.. அது நாற வாய் என்ற வடிவேலு காமெடிக்கேற்ப பல வருடங்களுக்கு முன்பு இதே விஜய் கலைஞர் குடும்பத்தை எப்படி பாராட்டி பேசியிருந்தார் என்பதை தெளிவுபடுத்த ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கனிமொழி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் விஜய்.
அந்த விழாவில் அவர் பேசிய விஷயங்கள் இதோ: ‘படத்தின் பெயர் கனிமொழி. ஆனால் கலைஞர் அவர்கள் முப்பது வருஷத்துக்கு முன்னாடியே தன் மகளுக்கு இந்த பெயரை வைத்திருக்கிறார். இந்த பேரு மட்டுமில்ல. அவங்க குடும்பத்தில் உள்ள நிறைய பெயர்கள், உதயநிதி, கலாநிதி, அருள்நிதி, தயாநிதி, தமிழரசு என இந்த மாதிரி என்னுடைய படத்திற்கும் இவர்கள் பெயரை பயன்படுத்த ஆசைப்பட்டிருக்கிறேன்.’
‘அந்தளவுக்கு பவர்ஃபுல்லான பெயர்கள். டாக்டர் என்ற முறையில் தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் எத எத எப்பப்போ செய்யணுமோ அத அத அப்பப்போ செய்து கொண்டிருக்கிறார் கலைஞர் அவர்கள். இந்தியாவிலேயே பரம்பரை பரம்பரையா பேர் சொல்லும் குடும்பம் என்றால் அது நேரு குடும்பம்தான். அதற்கு அடுத்த படியாக தமிழ் நாட்டில் பேர் சொல்லும் குடும்பம் கலைஞர் ஐயா குடும்பம்தான். ’ என அந்த வீடியோவில் விஜய் பேசியிருக்கிறார். இதை நெட்டிசன்கள் இப்போது டிரெண்டாக்கி வருகின்றனர்.