கவுண்டமணி மாதிரி ஒருத்தர் சினிமாவில் யாருமே இல்ல!.. பி.வாசு சொன்ன ஆச்சர்ய தகவல்!...

by Murugan |
goundamani
X

Goundamani: கோயம்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கவுண்டமணி நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு நாடகங்களில் நடிக்க துவங்கினார். நாடகங்களில் அவர் வில்லன் வேடத்தில் எல்லாம் அசத்தலாக நடிப்பாராம். இதை சொன்னது அவருடன் பல படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்கவைத்த செந்தில்தான். ஒரு கட்டத்தில் கவுண்டமணி இவரை தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.

சினிமாவில் வாய்ப்பு: நாடகத்திலேயே இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். செந்திலுக்கு சின்ன சின்ன வேஷங்கள் கிடைக்கும். அதன்பின் இருவரும் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு முயற்சிகள் செய்தார்கள். இரண்டு பேருக்கு உதவியது பாக்கியராஜ்தான். பாரதிராஜாவிடம் அடம்பிடித்து பதினாறு வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களில் கவுண்டமணிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.


கவுண்டமணி - செந்தில் கூட்டணி: செந்திலுக்கு தூரல் நின்னு போச்சி படத்தில் நம்பியாருடன் நடிக்க வைத்தார். இப்படித்தான் செந்தில் டேக் ஆப் ஆனார். அதன்பின் கவுண்டமணி - செந்தில் இணைந்து பல படங்களில் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்கள். கவுண்டமணி - செந்தில் இருந்தால் படம் என்கிற நிலை கூட அப்போது இருந்தது.

அதேநேரம், செந்தில் இல்லாமல் பல படங்களில் ஹீரோவுடன் இணைந்து காமெடி செய்து கலக்கியிருக்கிறார் கவுண்டமணி. 90களில் பல படங்களில் செகண்ட் ஹீரோவாக கலக்கி இருக்கிறார். அப்போதெல்லாம் ஹீரோக்களின் சம்பளத்தை விட கவுண்டமணி அதிக சம்பளம் வாங்கினார். எஜமான் படத்தில் நடிக்க ரஜினியை விட அதிக சம்பளம் கேட்டார் கவுண்டமணி.


முதல் காமெடி நடிகர்: கவுண்டமணி இருந்தால் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள் என்பதால் தயாரிப்பாளர்களும் அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்தார்கள். ஒரு நாளைக்கு பல லட்சம் என சம்பளம் வாங்கிய முதல் காமெடி நடிகரும் கவுண்டமணிதான். இப்போது அவருக்கு 85 வயது ஆகிறது. ஆனாலும், நடித்து கொண்டிருக்கிறார். விரைவில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஒத்த ஓட்டு முத்தையா என்கிற படம் வெளியாகவுள்ளது.


பாராட்டிய பி.வாசு: இந்த படம் தொடர்பான விழா சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்ட கவுண்டமணி கலகலப்பாக பேசி எல்லோரையும் சிரிக்க வைத்தார். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பி.வாசு ‘கவுண்டமணி என்னுடைய இயக்கத்தில்தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார். கவுண்டமணி போல் ஒரு நடிகரை திரையுலகில் பார்க்க முடியாது. அவருக்கு டிரைவர் கிடையாது. அவரேதான் காரை ஓட்டி வருவார். அவருக்கு மேனேஜர் கிடையாது. டைரி கிடையாது. தேதி சொல்லிட்டா அத மனதில் வைத்துக்கொள்வார். சரியா அந்த தேதிக்கு நேரத்துக்கு வந்துடுவார். அவர் மிகவும் எளிமையானவர்’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

Next Story