10-15 நாட்களில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது... முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கொரோனா, நிவர், புரவி புயல்களால் பாதிக்கப்பட்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் ரூ.12,110 கோடி அளவிலான பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனால், கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவித்த விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். முதல்வர் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் பல இடங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். விவசாய சங்கப் பிரதிநிதிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றியும் தெரிவித்தனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரப் பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார். ராணிப்பேட்டை மாவட்டம் கைனூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது. இன்னும் 10-15 நாட்களில் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார். இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்று மாதங்களில் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடும் என்ற ஸ்டாலினின் பேச்சு குறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``இன்னும் 3 மாதங்களில் தி.மு.க என்ற கட்சியே இருக்காது’’ என்று பதிலடி கொடுத்தார்.
மேலும் அவர் பேசுகையில், ``நாங்கள் ஒன்றுமே கிழிக்கவில்லை என்கிறார் ஸ்டாலின்; நாங்கள் கிழித்ததைத்தான் சொல்கிறோம். நீங்கள் சட்டமன்றத்துக்கும் வருவதில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்றும் உங்களுக்குத் தெரிவதில்லை. எங்களின் திட்டங்களை உங்களுக்குத் தெரியப்படுத்தவே பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கிறோம். இத்தனை ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, துணை முதல்வராக இருந்து மக்களைச் சந்திக்காத ஒரே அரசியல்வாதி ஸ்டாலின்தான். தி.மு.க ஆட்சியில் செய்தது என்ன... விவாதிக்கத் தயாரா?’’ என்றும் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார்.