"பாக்யராஜ் சார் வாழ்ந்த தெருவுக்கு அவரின் பெயர் சூட்ட வேண்டும்"... முதலமைச்சர் விஜய்யிடம் பட்டுக்கோட்டை பிரபாகர் வைத்த 3 கோரிக்கைகள்!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்து தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட கே.பாக்யராஜ் நேற்று (ஜூன் 27) காலமானார்.
இவரது மறைவு ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கே.பாக்யராஜ் இயக்கி, நடித்த 'அவசர போலீஸ் 100, பவுனு பவுனுதான்' ஆகிய இரண்டு படங்களில் இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவர் தான் பட்டுக்கோட்டை பிரபாகர்.
பிரபல எழுத்தாளரான பட்டுக்கோட்டை பிரபாகர் 'மகாபிரபு, ப்ரியமுடன், பகவதி, ஏய், நான் அவன் இல்லை, காக்கி சட்டை, இமைக்கா நொடிகள்' போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, பட்டுக்கோட்டை பிரபாகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் "முதல்வர் விஜய் அவர்களுக்கு வணக்கம். நம் கே.பாக்யராஜ் அவர்களுக்கு அரசு மரியாதை செய்து வழியனுப்ப உத்தரவிட்டமைக்கு இதயத்திலிருந்து நன்றி சார்.
சில கோரிக்கைகள் சார்..
1.பாக்யராஜ் சார் வாழ்ந்த லேக் ஏரியா ஐந்தாவது குறுக்குத் தெருவுக்கு அவரின் பெயர் சூட்டினால் அது காலத்திற்கும் அவருக்குச் செய்த மரியாதையாக நிலைத்து நிற்கும்.
2.அரசு வழங்கும் சினிமா விருதுகளில் ஜனரஞ்சகப் பிரிவுக்கான விருதை அவர் பெயர் சூட்டி வழங்கலாம்.
3.பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் இருவருக்கும் அரசு சார்பாக ஒரு பொது இடத்தில் சிலைகள் வைக்கலாம்.
தமிழ் சினிமாவைப் பெருமைப் படுத்தும் அற்புதமான படைப்புகள் தந்திருக்கும் இருவருக்கும் சினிமாவிலிருந்து தலைவராக உருவாகியுள்ள நீங்கள் இந்த கெளரவங்களைச் செய்வீர்கள் என்று நம்பிக்கையுடன் இந்தக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
