2 நாளில் ராம்சரணின் பெத்தி படம் இத்தனை கோடியாம்!.. அஃபிஷியலாக அறிவித்த படக்குழு!..
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள பெத்தி திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரம்மாண்டமான எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், முதல் இரண்டு நாட்களிலேயே வசூல் சாதனை படைத்து திரையுலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
விளையாட்டு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.135.36 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனிங் படங்களில் ஒன்றாக மாறியது. முதல் நாள் வசூல் சாதனையைத் தொடர்ந்து இரண்டாவது நாளிலும் இத்திரைப்படம் வலுவான வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் வெளியான அதிகாரப்பூர்வ தகவலின்படி, பெத்தி திரைப்படம் இரண்டு நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.181.8 கோடி வசூலை எட்டியுள்ளது. இதன்மூலம் வெறும் இரண்டு நாட்களில் ரூ.180 கோடியை கடந்துள்ள படம், ரூ.200 கோடி வசூல் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்ப ரசிகர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜான்வி கபூர் தொடர்பான சில காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் எழுந்தாலும், அவை படத்தின் வசூலை பெரிய அளவில் பாதிக்கவில்லை என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாறாக, சர்ச்சைகளும் படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
