பொண்ணுங்கள தப்பா காட்டணும்னு நினைக்கல!.. பெத்தி பட இயக்குநர் பகிரங்க மன்னிப்பு!..
ராம் சரண் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றிநடை போட்டு வரும் பெத்தி திரைப்படம் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தில் நடிகை ஜான்வி கபூர் இடம்பெற்றுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், இயக்குநர் புச்சி பாபு சனா அந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
படம் வெளியான பிறகு, ஜான்வி கபூர் கதாபாத்திரம் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது நடிப்பை விட உடல் அழகை மையப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பலர் விமர்சனம் செய்தனர். குறிப்பாக அவரது அறிமுகக் காட்சி மற்றும் சில பாடல் காட்சிகள் பெண்களை பொருளாக சித்தரிப்பதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன.
இந்த சர்ச்சை குறித்து பேசிய இயக்குநர் புச்சி பாபு சனா, “ராம் சரணுக்கும் ஜான்வி கபூருக்கும் இடையிலான காதல் பகுதியை இலகுவாகவும் விளையாட்டுத்தனமாகவும் காட்ட வேண்டும் என்பதற்காகவே அந்த காட்சிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை இந்தளவுக்கு எதிர்ப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரம் எனக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் பெண் கதாபாத்திரங்களை வடிவமைக்கும் போது இன்னும் அதிக கவனத்துடன் செயல்படுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பார்வையாளர்களின் கருத்துக்களை மதிப்பதாக தெரிவித்த அவர், பெண்களை அவமதிக்கும் நோக்கம் எதுவும் படக்குழுவுக்கு இல்லை என்றும் விளக்கம் அளித்தார். இருப்பினும் சில காட்சிகள் பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுவதால், சர்ச்சைக்குரிய அந்த காட்சிகளை திரைப்படத்திலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
“திரைப்படம் என்பது மக்களை ஊக்குவிக்கும் ஒரு ஊடகம். பெண்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் சித்தரிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களது காட்சிகள் யாரையும் புண்படுத்தியிருந்தால் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” எனவும் அவர் கூறியுள்ளார்.
