Categories: Cinema News latest news

பொன்னியின் செல்வன் நிஜமாவே ஹிட் படமா?… வெளுத்துவாங்கிய பிரபல திரைப்பட விநியோகஸ்தர்…

கடந்த ஆண்டு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த நிலையில் கடந்த மாதம் இரண்டாம் பாகம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு பக்கம் இத்திரைப்படத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்து வந்தாலும் “பொன்னியின் செல்வன்” நாவலை வாசித்தவர்களுக்கு இத்திரைப்படம் திருப்தியாக இல்லை. “மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலில் இருப்பது போல் படமாக்காமல் வேறு மாதிரி எடுத்துவிட்டார்” என்று விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்துகொண்டதாக படமாக்கியதை நாவல் வாசித்தவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இவ்வாறு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்கு கலவையான கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில், “பொன்னியின் செல்வன்” இரண்டாம் பாகம் ரூ.200 கோடிகளை தாண்டி வசூல் செய்து வருவதாக பல செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த நிலையில் பிரபல திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்பேட்டியில் நிருபர், “பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 200 கோடிகளை வசூல் செய்துள்ளதாக கூறுகிறார்களே, அது உண்மையா?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த திருப்பூர் சுப்ரமணியம், “பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 200 கோடி வசூல் ஆகியுள்ளது என்று மணிரத்னம் எதுவும் சொன்னாரா? அல்லது அத்திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனமாவது அப்படி சொன்னதா? ஏன் யாரோ ஒருவர் கூறியதை வைத்து நாம் விவாதிக்க வேண்டும். பொழுதுபோகாமல் சிலர் டிவிட்டரில் அப்படிப்பட்ட செய்தியை பரப்பிக்கொண்டு இருக்கின்றனர். ஆதலால் இதை பற்றி பேசி எந்த பிரயோஜனமும் கிடையாது. தயாரிப்பாளர்தான் இதனை அறிவிக்க வேண்டும்” என்று கூறிய அவர், “இப்போதெல்லாம் தயாரிப்பாளர் கூறுவதை கூட நம்பமுடியவில்லை. 5 கோடி வசூலானாலே 10 கோடி வசூலாகியுள்ளது என கூறிவிடுகிறார்கள். உண்மையான நிலவரத்தை சொன்னால்தான் தமிழ் சினிமா உருப்படும்” எனவும் மிக வெளிப்படையாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கௌதம் மேனன்- விஜய் கூட்டணி டிராப் ஆனதுக்கு காரணம் இதுதானா?.. அப்போ தளபதி அதுல வீக்கா?..

Arun Prasad
Published by
Arun Prasad