என் மூச்சவ!.. பேச்சவ!.. மமிதா பைஜுவுக்காக பணத்தை வாரி இரைக்கும் பிரதீப் ரங்கநாதன்?..
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவரது புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் உருவாகும் முதல் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். நகைச்சுவையுடன் கலந்த உணர்ச்சிப்பூர்வமான கதைக்களம் ஆகியவை அந்த படத்திற்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தன. விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்ற ‘கோமாளி’, வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டது. இதன் மூலம் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநராக உருவெடுத்தார்.
இயக்குநராக வெற்றி பெற்ற பின்னர், நடிகராகவும் தனது பயணத்தை தொடங்கிய அவர், ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து ‘ட்ராகன்’, ‘டியூட்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த அவர், தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வருகிறார். அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வசூலைக் குவித்ததால், குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முக்கிய இளம் நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
இதனிடையே, சமீபத்தில் வெளியான ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் மதிப்பில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அவர் மீண்டும் இயக்கி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ள பிரதீப் ரங்கநாதன், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படப்பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். இந்த படத்தில் அஸ்வத் மாரிமுத்து கதாநாயகனாகவும், இளம் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படம் இளைஞர்களை கவரும் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதையாக உருவாகி வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
