அடுத்தடுத்து ஃப்ளாப்!.. ப்ரீத்தி அஸ்ராணியை காப்பாற்றுமா அப்பா குட்டி?

 
antony

அயோத்தி படத்தின் மூலம் அறிமுகமான ப்ரீத்தி அஸ்ரானிக்கு முதல் படம் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுத் தந்தது. ஆனால், அதன் பின்னர் விஜயகுமார் உடன் நடித்த எலக்‌ஷன், கவின் உடன் அவர் நடித்த கிஸ், ஷேன் நிகாம் உடன் நடித்த பல்டி, ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான 29 உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில், வரும் நவம்பர் 20ம் தேதி விஜய் ஆண்டனி உடன் இணைந்து ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள அப்பா குட்டி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமையுமா என்கிற கேள்வியை கிளப்பி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அப்பா குட்டி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், ப்ரீத்தி அஸ்ரானி படம் குறித்து பேசியது ரசிகர்களை கவர்ந்தது.

அப்பா குட்டி திரைப்படம் எனக்கு மிகவும் தனிப்பட்ட முறையில் நெருக்கமான படம். இயக்குநர் மு. மாறன் ஒவ்வொரு காட்சியையும் மிகத் தெளிவான பார்வையுடன் உருவாக்கியிருந்தார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. குறிப்பாக, ஒரு மகளாக அப்பாவின் அன்பையும் தியாகத்தையும் உணரக்கூடிய பல தருணங்கள் படத்தில் இருக்கின்றன. அம்மாவின் அன்பைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் அப்பாக்கள் தங்களுடைய அன்பையும் உணர்வுகளையும் அதிகம் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் நமக்காகச் செய்யும் தியாகங்களையும் முயற்சிகளையும் நாம் பல நேரங்களில் கவனிப்பதில்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பலரும் தங்களுடைய அப்பாவுக்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவார்கள் என்று நம்புகிறேன்.

என்னுடைய கதாபாத்திரம் வயதில் இளமையாக இருந்தாலும், மிகவும் முதிர்ச்சியான சிந்தனைகளைக் கொண்டது. அதை என்னால் சிறப்பாகச் செய்ய முடியுமா என்று இயக்குநரிடம் கேட்டபோது, அவர் எனக்கு நம்பிக்கையளித்தார். விஜய் ஆண்டனி சாருடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நடிகர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், தயாரிப்பாளர் எனப் பல பொறுப்புகளை ஏற்றிருந்தாலும், மிகவும் எளிமையாகவும் சக நடிகர்களுக்கு உரிய சுதந்திரம் கொடுத்தும் பணியாற்றினார். அவரது கதைத்தேர்வு, தொழில்முறை அணுகுமுறை மற்றும் பணிவு ஆகியவை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் சார் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். ஊட்டி மற்றும் சென்னையில் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிப்பது சவாலானது. ஆனால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றினார்கள். விநியோகஸ்தர்கள் செந்தில் சார், பிரவீன் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இந்தப் படம் அப்பா ,மகள் உறவை மட்டும் பேசும் வழக்கமான உணர்வுபூர்வமான படமாக இருக்காது. இதில் வித்தியாசமான கதைக்களம், வணிக அம்சங்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் என அனைத்தும் கலந்திருக்கின்றன. நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’ படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தர வேண்டும். குறிப்பாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி, என்றார்.

Tags

From Around the web