
Cinema News
விஜயகாந்தின் படங்களை இனி விஜய் பயன்படுத்தக்கூடாது.. கட்டளையிட்ட பிரேமலதா விஜயகாந்த்
தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர்களில் ஒருவர் விஜய். ரஜினியின் இடத்தை அடுத்ததாக இவர் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது திரைப் பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவிப்பை வெளியிட்டார். எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரின் 69 ஆவது திரைப்படமான ஜனநாயகன்தான் தன்னுடைய கடைசி படம் என்றும் இனி தான் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் தனது பிரைம் டைமில் சினிமா வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்து அரசியலில் குதித்தார்.
கட்சி ஆரம்பித்த உடனே விக்கிரவாண்டியில் தவெக சார்பில் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டது. அதில் தங்களுடைய கொள்கை கோட்பாடு தங்களுடைய கட்சித் தலைவர்கள் என அனைத்தையும் அறிவித்தார். அந்த மாநாட்டில் விஜயின் பேச்சு பலரின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு தொடர்ந்து அரசியல் சார்ந்த கூட்டங்களில் பங்கெடுத்து வருகிறார். எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர களப்பணியில் இறங்கி வரும் விஜய் தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி ஆகஸ்ட் மாதம் விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று இந்த மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விஜய் இனிமேல் விஜயகாந்தின் படங்களை பயன்படுத்தக்கூடாது என்று பகீர் அறிவிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளார். அதில்,” எம்ஜிஆரை தனது குருவாக விஜயகாந்த் அறிவித்தது போல, விஜய் தனது குருவாக விஜயகாந்தை ஏற்றுக் கொள்ளட்டும். அப்பொழுது மட்டுமே விஜயகாந்தின் புகைப்படங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.” என கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
விஜயகாந்த் தனி கட்சி ஆரம்பித்து எம்ஜிஆரை போல மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்து அவர் வழியில் பயணிக்கத் தொடங்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். இந்நிலையில் விஜய் இனி விஜயகாந்தின் படங்களை பயன்படுத்த புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளார் பிரேமலதா. விஜய் மக்களுக்கு என்ன நல்லது செய்வார்?, அவரது கொள்கை என்ன? கோட்பாடு என்ன? என்பதை பற்றி விவாதிக்காமல் விஜயகாந்தை குருவாக அறிவிக்க வேண்டும் என்று பிரேமலதா கூறி இருப்பது ரசிகர்களிடம் கண்டனத்தை பெற்றுள்ளது.