மாரி செல்வராஜ் படத்தில் கயாடு லோஹர் - பிரியங்கா மோகன்!.. இளையராஜா இசையில் மஞ்சணத்தி!..
தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மஞ்சணத்தி’ என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான கிளிப்பிங்ஸ் வீடியோவை வெளியிட்டு படத்தின் தலைப்பு மற்றும் முக்கிய தகவல்களை தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் ‘50 இயர்ஸ் லைவ் கான்சர்ட்’ நிகழ்ச்சியில் இந்தப் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேடையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களிலும் ‘மஞ்சணத்தி’ என்ற தலைப்பு வேகமாக பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் நடிகைகள் கயாடு லோஹர் மற்றும் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் கதிர், மாரி செல்வராஜின் உலகில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் தோன்றப் போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் படைப்பாளர்களில் ஒருவர். இயக்குநர் ராம் உட்பட பலரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற படங்களின் மூலம் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியை நிரூபித்தார்.
‘மஞ்சணத்தி’ என்ற தலைப்பே கிராமத்து மண்வாசனையையும், இயற்கையோடு கலந்த வாழ்க்கையையும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. வெளியிடப்பட்ட கிளிப்பிங்ஸ் வீடியோவும் அதே உணர்வை பிரதிபலிக்கும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போலவே சமூக வாழ்வியல், மனித உறவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களம் இதில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
