இனிமே நடிகர்களுக்கு சம்பளம் இல்லை!.. அஜித், விஜய், ரஜினி என்ன பண்ண போறாங்க!...
கன்னடம்,தெலுங்கு, மலையாள சினிமாவை ஒப்பிடும்போது தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களுக்கு மிகவும் அதிகளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது. கேரளாவில் 300 கோடி வசூலை கொடுக்கும் மோகன்லாலுக்கு கூட 25 கோடிதான் சம்பளம். அதோடு சில ஏரியாக்களை எழுதி வாங்கிக் கொள்கிறார்கள்.
தெலுங்கில் கூட மிகவும் குறைவான சம்பளம்தான். பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களிலும் 5 வருடங்கள் நடித்த பிரபாஸ் வாங்கிய சம்பளம் 25 கோடி. அதேநேரம், தற்போது அவரின் படங்கள் பல மொழிகளிலும் வெளியாகும் பேன் இந்தியா படங்களாக உருவாகி அதிக வசூலை பெறுவதால் அவருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.
தமிழைப் பொறுத்தவரை விஜய், அஜித், ரஜினி ஆகியோர் மிகவும் அதிக சம்பளம் வாங்குகிறார்கள். விக்ரம் மெகா வெற்றிக்கு பின் கமலும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார். விஜய்க்கு 250 கோடி, அஜித்துக்கு 185 கோடி, ரஜினிக்கு 150 கோடி என சம்பளம் கொடுக்கப்படுகிறது. இப்படி படத்தின் மொத்த பட்ஜெட்டில் 60-70 சதவீத தொகை நடிகர்கலுக்கு சம்பளமாகவே கொடுக்கப்படுவதால் மீதி பணத்தில்தான்தான் இயக்குனர்கள் படமே எடுக்கிறார்கள். அதனால்தான் படங்களில் குவாலிட்டி இல்லை என்கிற விமர்சனங்கள் வருகிறது.
எனவே, நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பல வருடங்களாக தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால், நடிகர்களும், நடிகர் சங்கமும் அதை கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில்தன், சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
நடிகர்கள் வருமானத்தில் பங்கு என்ற அடிப்படையில் படத்தின் லாப நஷ்டங்களில் பங்கு பெற வேண்டும். நடிகர்கள், இயக்குனர்கள் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் வெப்சீரியஸ்களை தவிர்த்து விட்டு திரைப்படங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நடிகர்களை வைத்து தனியார் அமைப்புகள் நடத்தும் விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றிடம் அனுமதி பெற வேண்டும் என்றெல்லாம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
ஒரு பெரிய நடிகருக்கு 200 கோடி சம்பளம் கொடுத்து 300, 350 கோடி பட்ஜெட்டில் படமெடுத்து அந்த படம் நஷ்டமடைந்தால் தயாரிப்பாளருக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது. நடிகர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். எனவேதான் படம் எவ்வளவு லாபத்தை பெறுகிறதோ அதில் நடிகருக்கு குறிப்பிட்ட சதவீதம் சம்பளமாக கொடுப்போம் என தற்போது பேசி இருக்கிறார்கள். ஆனால் இதை நடிகர்களும், நடிகர் சங்கமும் ஏற்றுக்கொண்டு நடைமுறைக்கு வருமா என்பதுதான் சந்தேகமே என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
