Categories: Cinema News latest news

“நீ சுகமா இருப்ப, நாங்க நடு ரோட்டுக்கு போகனுமா?”… வெளுத்து வாங்கிய ராஜன்… கடுப்பான செண்ட்ராயன்

தமிழில் பல திரைப்படங்களை தயாரித்தவர் ராஜன். சமீப காலமாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் அவர் தனது சினிமா அனுபவத்தை அவ்வப்போது பகிர்ந்துகொள்வார். சில நேரங்களில் அவர் பேசுவது சர்ச்சைகளையும் உண்டு செய்யும். தனது மனதில் பட்டதை எந்த தயக்கமும் இல்லாமல் பேசுபவர் ராஜன். ஆதலால் அது சிலரின் மனதை புண்படுத்துவதும் உண்டு.

இந்த நிலையில் தான் தினேஷ் மாஸ்டர், யோகி பாபு ஆகியோரின் நடிப்பில் வெளிவர உள்ள “லோக்கல் சரக்கு” என்ற திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்துகொண்டார் தயாரிப்பாளர் ராஜன். அவ்விழாவில் நகைச்சுவை நடிகர் செண்ட்ராயன், ஆர் கே செல்வமணி ஆகிய பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ராஜன்” ஒரு திரைப்படம் எடுப்பது பெரிய டார்ச்சர். ஆதலால் யாரும் படம் தயாரிக்க வராதீர்கள்” என கூறினார். அப்போது இடைமறித்த செண்ட்ராயன் “அவர்கள் படம் எடுத்தால் தான் எங்களுக்கு வேலை” என கூறினார்.

அப்போது திடீரென்று செண்ட்ராயனை “போய் உட்காரு” என கத்தினார் ராஜன். மேலும் அவர் “உனக்கு நான் வேற வேலை வாங்கித்தரேன்” எனவும் கூறினார்.

அதற்கு பதிலளிக்க முயன்ற செண்ட்ராயனை “உட்காரு” என ஒருமையில் கத்தினார். அதன் பின் பேசத்தொடங்கிய ராஜன் “தயாரிப்பாளர்களாகிய நாங்கள் மிகவும் அவமானப்பட்டிருக்கிறோம். பத்து வருடமாக தயாரித்த தயாரிப்பாளர்களெல்லாம் இப்போது எங்கே?” என கேட்டார்.

மேலும் செண்ட்ராயனை பார்த்து “உனக்கு வேலை தர்ரதுக்கு நாங்க வெளியே போகனுமா? நாங்க வாழ்க்கையை இழக்கனுமா? படம் எடுப்பதற்கான டார்ச்சர் தயாரிப்பாளர்களாகிய எங்களுக்கு தான் தெரியும். உங்களை போன்ற நடிகர்களுக்கு தெரியாது. நடிகர்களாகிய நீங்கள் எல்லாம் சுகம் காண்பவர்கள்” எனவும் கூச்சலிட்டார்.

இந்த விழா முடிந்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய செண்ட்ராயன் “நடிகர்கள் எல்லாம் கார் வாங்குகிறார்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் தெருவில் நிற்கிறார்கள் என்பது போல் பேசுகிறார் ராஜன். எனக்கு இதை கேட்டவுடன் ஒரு மாதிரி ஆகிவிட்டது” என கூறினார்.

மேலும் “ஒரு தயாரிப்பாளர் நன்றாக இருந்தால் தான் டெக்னீசியன்கள் நன்றாக இருக்க முடியும். ஆனால் ராஜன் பேசிக்கொண்டிருக்கும்போது நான் குறுக்கே பேச வந்தது என்னுடைய தவறு தான்” எனவும் மன வருத்தத்துடன் கூறினார். இச்சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Arun Prasad
Published by
Arun Prasad