பாரதிராஜா மறைவால் சோகத்தில் திரையுலகம்.. தனது முடிவை அறிவிப்பதை ஒரு நாள் தள்ளிப்போட்ட ராகவா லாரன்ஸ்

 
lawrence

நடிகர், இயக்குநர் மற்றும் நடன இயக்குநரான ராகவா லாரன்ஸ் தனது வாழ்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பை ஒத்திவைத்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அவரது அடுத்தகட்ட முடிவு குறித்து ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக திருச்சி தொகுதியில் விஜய் தலைமையிலான கட்சியின் வேட்பாளராக ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளாரா என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் பேசப்பட்டு வந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில், தனது வாழ்க்கையை மாற்றக்கூடிய முக்கிய முடிவு ஒன்றை ஜூன் 11-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அறிவிப்பதாக லாரன்ஸ் தெரிவித்திருந்தார். இதனால் அவரது அறிவிப்பு அரசியல் தொடர்பானதா அல்லது திரையுலகம் சார்ந்ததா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ், “அனைவருக்கும் வணக்கம். ஜூன் 11-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு எனது வாழ்க்கை குறித்த முக்கிய முடிவை அறிவிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தேன். ஆனால் தற்போது பாரதிராஜா சார் அவர்களின் மறைவால் திரையுலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த இழப்பு குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற தனிப்பட்ட வேதனையை எனக்குத் தருகிறது. பாரதிராஜா சார் மீதும், சினிமாவுக்காக அவர் செய்த மகத்தான பங்களிப்பின் மீதும் நான் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக எனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அதற்குப் பதிலாக ஜூன் 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அந்த அறிவிப்பை வெளியிடுவேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அவரது அறிவிப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆவல் மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ராகவா லாரன்ஸ் தற்போது தனது வெற்றிகரமான ஹாரர்-காமெடி தொடரின் அடுத்த பாகமான காஞ்சனா 4 திரைப்படப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், பென்ஸ் படத்திலும் தீவிரம் காட்டி வருகிறார். சினிமா ஒருபுறம் அரசியல் அறிவிப்பு குறித்த பரபரப்பு, மறுபுறம் என பிசியாக உள்ளார். அவர் ஜூன் 12-ஆம் தேதி வெளியிட உள்ள அறிவிப்பு எந்த திசையில் அவரது பயணத்தை நகர்த்தப் போகிறது என்பதை அறிய ரசிகர்களும் அரசியல் வட்டாரங்களும் ஆவலுடன் காத்திருக்கின்றன.

Tags

From Around the web